பொதுக்கயத்துக் கீரந்தை. (பி-ம்.) 1. ‘முகிழ்முகுத்தனவே’, ‘தலைஇய’ 2. ‘குரலே’ 3. ‘செறிநிறை’ 5. ‘யான்றன் னறிவ லென்னறி யலளே’ 7. ‘செல்வனொரு’.
(ப-ரை.) முலை முகிழ் முகிழ்த்தன - நகில்கள் அரும்பின; தலை - தலையில், கிளைஇய மெல்குரல் கிழக்குவீழ்ந்தன - கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழேதாழ்ந்தன; செறிநிரை வெள்பலும் - செறிந்த வரிசையாகியவெள்ளிய பல்லும், பறிமுறை நிரம்பின - முதன்முறைவிழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; சுணங்கும் சிலதோன்றின - தேமலும் சில வெளிப்பட்டன; அணங்குதற்குயான் தன் அறிவல் - அவள் வருத்தும் பொருட்டு நான் அவளைஅறிவேன்; தான் அறியலள் - அவள் அதனை அறிந்திலள்;பெருமுது செல்வர் ஒரு மடமகள் - பெரிய முதிய செல்வத்தையுடையாரது ஒப்பற்ற மடப்பத்தையுடைய தலைவியாகிய அவள், யாங்கு ஆகுவள் கொல் - எத்தன்மையையுடையவளாவளோ?
(முடிபு) முலை முகிழ் முகிழ்த்தன; தலை குரல் வீழ்ந்தன; பல்லும்நிரம்பின; சுணங்கும் தோன்றின; யான் தன்னறிவல்; தான் அறியலள்; மடமகள் யாங்காகுவள் கொல்?
(கருத்து) தலைவி பருவம் வாய்த்தவளாகி என்னை வருத்தினாள்.
(வி-ரை.) தலைவி பேதைப் பருவம் கடந்தவளென்பதை முதலிற்கூறினான்;