துணியாத என் நெஞ்சம், வலிப்ப - பின்னர்த் துணிந்தமையால், என் வன்கணான் - எனது தறுகண்மையால்,வாழ்வேன் - உயிரோடு வாழ்வேனாயினேன்.
(முடிபு) தோழி, காதலர் பேணாராயினும் நெஞ்சம் வலிப்ப என்வன்கணான் வாழ்வேன்.
(கருத்து) தலைவர் தம்வினை முடித்து வருவரென்னும் துணிவினால்வாழ்வேனாயினேன்.
(வி-ரை.) தலைவி முதலில், “நம்பால் அன்புடைய தலைவர் தாம்மேற்கொண்ட வினையை முற்றச் செலுத்தா விடினும் வருவர்” என்றுஎண்ணினாள். அப்பால் “அவர் வினைமுடித்தே வருவார்; ஆதலின் நாம்ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று துணிந்தாள். துணியினும் தலைவன்பிரிவினை ஆற்றுதற்கு நெஞ்சத்திண்மை வேண்டுமாதலின், ‘என்வண்கணான் வாழ்வேன்’ என்றாள்.
மலரும் அரும்பும் குரவத்தில் நிறைந்தன. சினையென்றது குரவம்,புன்கென்னும் இரண்டன் சினைகளையும். இனிது: சாதியொருமை.காலையும்: உம்மை உயர்வு சிறப்பு. ஆண்மை என்றது இங்கே ஆள்வினையை. கடவது - செலுத்துவது; நிறைவேற்றுதல். வலியா நெஞ்சமென்றது, பெரியார் தாம் மேற்கொண்டதைச் செலுத்தாரென்று எண்ணியதுணிவின்மையையுடைய நெஞ்சமென்றபடி. கடவதெனவும் அன்றெனவும்துணியாத நெஞ்சமென்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். வலிப்ப - பெரியோர் கண்ணிய ஆண்மை கடவதெனத் துணிய. ஏ: அசை நிலை.
இஃது ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.
ஒப்புமைப் பகுதி 2. புன்க மலருக்குப் பொரி: குறுந். 53:2-4, ஒப்பு.
6. நெஞ்சம் வலித்தல்: “வல்லா நெஞ்சம் வலிப்ப” (அகநா. 53:14.)
(341)
(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.) 342. | கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் |
| காவன் மறந்த கானவன் ஞாங்கர்க் |
| கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் |
| குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக் |
5 | குவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த |
| நயந்தோர் புன்கண் டீர்க்கும் |
| பயந்தலைப் படாஅப் பண்பினை யெனினே. |
என்பது செறிப்பறிவுறுக்கப்பட்டான் வரைவின்கட் செல்லாது, பின்னும்வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது.