(முடிபு) தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.
(கருத்து) தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.
(வி-ரை.) தூற்றுந்துவலைப் பனிக்கடுந்திங்களென்றது பனிக்காலத்தைச் சுட்டியது. அணல் - அலைதாடி யென்பர் (பு. வெ. 12, உரை.) செருத்தல்: ஆகுபெயர். மாலைக் காலத்தில் பசுக்கள் தம்முடைய கன்றுகளை நினைந்து பிரிந்து வந்தன. பொருட்பிணி - பொருள்வேட்கை (இறை. 35, உரை.)
ஒப்புமைப் பகுதி 1. நோற்றோர் மன்ற: புறநா. 26:16.
3-4. ஆனேறுடன் பசுக்கூட்டம் இருத்தல்: அகநா. 105: 15, 213:6, 269:3, 291:3.
6. புன்கண் மாலை: குறுந். 46:6, 330:6.
4-6. மாலையில் கன்றை நினைந்து பசுக்கள் வருதல்: குறுந். 108:2, ஒப்பு.
பசுக்கள் கன்றை நினைந்து பாலை வார்த்து வருதல்: "பதவுமேயலருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக்,கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலை" (அகநா. 14:9-12);"குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா லெழுதுகளவிப்பக், கன்றுநினை குரல மன்றுவழிப் படர" (மணி. 5:130-32.)
7. பொருட்பிணி: குறுந். 255:7, ஒப்பு.; இறை. சூ. 35, 39.
(344)
(பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும்வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கேதங்கிச் செல்க" என்று தோழி கூறியது.) 345. | இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர் |
| வரைமரு ணெடுமணற் றவிர்த்துநின் றசைஇத் |
| தங்கினி ராயிற் றவறோ தெய்ய |
| தழைதா ழல்கு லிவள்புலம் பகலத் |
5 | தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி |
| இழுமென வொலிக்கு மாங்கட் |
| பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. |
என்பது பகல்வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா வென்றது.
அண்டர்மகன் குறுவழுதி. (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’ 2. ‘றவிர்த்த நிரையசைஇ’, ‘றவிர்த்தனிரசைஇ’3. ‘றவறோதகைய’, ‘றவறேதைய’, ‘றவறோதைஇய’.
(கு-பு.) இச்செய்யுளின் நாலாம் அடி ஒரு பிரதியில் இல்லை.