கயத்தூர் கிழான். (பி-ம்.) 3. ‘தணந்தனி ராயின்’, ‘தணிந்தனை யாயினெம் முய்த்துக்கொடுமோ’.
(ப-ரை.) நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் - நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை அடையும்; ஆர்ந்தோர் வாயில் - பன்முறை உண்டோரது வாயினிடத்தே, தேனும் புளிக்கும் - தேனும் புளிப்பையுடைய தாகும்; ஆதலின், தணந்தனை ஆயின் - நீ எம்மைப் பிரிவை யாயின், அம் தண் பொய்கை - அழகிய தண்ணிய பொய்கையையுடைய, எந்தை எம் ஊர் - எம் தந்தையினது எம்ஊரின்கண்ணே, கடு பாம்பு வழங்கும் தெருவில் - நஞ்சின்கடுமையையுடைய பாம்புகள் ஓடும் தெருவில், நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் - நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை, எம் இல் உய்த்துக்கொடுமோ - எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக.
(முடிபு) நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; தேனும் புளிக்கும்;தணந்தனையாயின் எம்மை எம் இல் உய்த்துக் கொடுமோ.
(கருத்து) எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக.
(வி-ரை.) தண்ணியதாய் ஆடுதற்கினியதாகிய நீர் நெடுநேரம்ஆடியபின் கண்சிவத்தற்குக் காரணமாயினமையின் வெறுப்பைத்தருவதாயிற்று. தேன் முதலில் இனிதாகிப் பின் நாட் செல்லச் செல்லப்புளிக்கும்; ‘இனிதாய்ப் பின் தீங்கு விளைத்தலின் தேன் உவமம்’(சீவக. 222) என்பர் நச்சினார்க்கினியர். இவ்விரண்டு உவமைகளும்’‘யாம் உனக்கு இனியமாகியிருந்தும் நெடுங்காலம் பழகினமையின்