கபிலர். (பி-ம்.) 5. ‘சிறுதினைக் காக்குஞ்’ 7. ‘மின்படு’.
(ப-ரை.) பணை எழில் ஞெகிழ் தோள் - மூங்கிலினதுஅழகு நெகிழ்ந்த நின் தோள்கள், முனி படர் உழந்த - வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய, பாடு இல் உண் கண் பனி - துயிலுதலில்லாத மையுண்ட கண்களில் உண்டாகும் துளி, கால் போழ்ந்து - குறுக்கே சென்று, மெல்லிய ஆகலின் -இப்பொழுது மெலிவையுடையவாதலினால், ஏனல் அம் சிறு தினை காக்கும் - தினைச் சாதியுள் அழகிய சிறிய தினையைக் காக்கின்ற, சேணோன் - பரணின் மேலுள்ள குறவனது, ஞெகிழியின் - கொள்ளிக் கட்டையினால், பெயர்ந்த -அஞ்சிப்போன, நெடு நல் யானை - உயர்ந்த நல்ல யானை யானது, மீன் படு சுடர் ஒளி - விண்மீன் வீழ்வதனால் உண் டாகிய மிக்க ஒளியை, வெரூஉம் - அஞ்சுகின்ற, வான் தோய் வெற்பன் - வானத்தை அளாவிய மலையையுடைய தலைவன், மணவா ஊங்கு - பொருந்துதற்கு முன்பு, மேவரத் திரண்டு - விரும்பும்படி பருத்து, நல்ல என்னும் சொல்லை மன்னிய - இவை நல்லன என்று கூறப்படும் சொற்களை அடைந்தன.
(முடிபு) தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லைமன்னிய.
(கருத்து) தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்புஉண்டாகின்றது.