பக்கம் எண் :


642


(தலைவனது பிரிவின்கண் வருந்திய தலைவியை நோக்கி, “இதோகார்ப்பருவம் வந்தது; அதனைத் தெரிவிக்கும் முல்லைக் கொடிகளும்அரும்பின; இனி அவர் வருவர்” என்று தோழி கூறியது.)
 358.    
வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே  
    
எறிகட் பேதுற லாய்கோ டிட்டுச்  
    
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க  
    
வருவே மென்ற பருவ முதுக்காண்  
5
தனியோ ரிரங்கும் பனிகூர் மாலைப்  
    
பல்லான் கோவலர் கண்ணிச்  
    
சொல்லுப வன்ன முல்லைமென் முகையே.  

என்பது தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கொற்றன்.

     (பி-ம்.) 1. ‘விம்ம’ 2. ‘பேதுறல் யாங்கோடிட்டு’, ‘பேதுறவாய்’3. ‘வாயபற்று’, ‘வாஅயபற்று’ 6. ‘கோவலர்க்’ 7. ‘சொல்லுவ’, ‘சொல்லு’.

     (ப-ரை.) வீங்கு இழை நெகிழ - செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி, விம்மி -அழுது, ஈங்கு - இவ்வாறு, எறிகண் பேதுறல் - நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க. ஆய் கோடு இட்டு - ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து, சுவர்வாய் பற்றும் - சுவரினிடத்தைப் பற்றி நிற்கும், நின் படர் - நினது துன்பம், சேண் நீங்க வருவேம் - நெடுந் தூரம் போகும்படி மீண்டு வருவேம், என்ற - என்று தலைவர் கூறிய, பருவம் உதுக்காண் - பருவமானது இது பார், முல்லை மெல் முகை - முல்லையினது மெல்லிய அரும்புகள், தனியோர் இரங்கும் பனிகூர்மாலை - தலைவரைப் பிரிந்ததனிமையையுடையோர் வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சி மிக்க மாலைக்காலத்தில், பல் ஆன் கோவலர் - பல பசுக்களை யுடைய இடையர்களது, கண்ணி - மாலையிடத்தே இருந்து,சொல்லுபஅன்ன - இப்பருவத்தைச் சொல்லுவனவற்றைப் போன்றன.

     (முடிபு) பேதுறல்; நின் படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக் காண்; முல்லைமென்முகை சொல்லுபவன்ன.

     (கருத்து) தலைவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின்அவர் விரைவில் வருவர்.