பக்கம் எண் :


651


     (பி-ம்.) 2. ‘புதவின்’; 3. ‘யெய்துற்றுப்’; 4. ‘வறுநிழல்’; 6. ‘வின்றுனைப்’.

     (ப-ரை.) பெரும--, இன் துணை பிரிந்து - இனிய துணைவியைப் பிரிந்து, கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - கண்ணியை அணிந்த கொம்பையுடைய தலைமையை யுடைய நல்ல மலை எருது, செ கோல் பதவின் வார் குரல் கறிக்கும் - செவ்விய தண்டுகளையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும், மடம் கண் வரை ஆ நோக்கி - மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்து, வெய்துற்று - பெருமூச்சுவிட்டு, புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் - புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தினது புள்ளிகளையுடைய நிழலின் கண்ணே தங்குகின்ற, இன்னா அரு சுரம் இறத்தல் இனிதோ-இன்னாத கடத்தற்கரிய சுரத்தைக் கடத்தல் இனிமையையுடையதோ?

     (முடிபு) பெரும, துணைப்பிரிந்து சுரம் இறத்தல் இனிதோ?

     (கருத்து) தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாது.

     (வி-ரை.) கண்ணி - ஒருவகை மாலை. கண்ணி மருப்பு - கண்ணி யைப் போன்று வளைந்த மருப்பெனலுமாம். பதவு - அறுகு. உகாய் மரத்தின் அடி, “புன்கா லுகாஅய்” (குறுந். 274:1) என்று முன்னும் கூறப் பட்டது. தழைகளின் செறிவின்மையின் வரி நிழலை உடையதாயிற்று.

     ஒப்புமைப் பகுதி 1. மடக்கண்: குறுந் 64:3; அகநா. 238:6. 4.வரிநிழல்: சிறுபாண். 12.5. 5-6. ஒருவாறு ஒப்பு: குறுந். 124: 3-4.

(363)
  
(வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “மகளிர் துணங்கை யாடும் நாளும், மள்ளர் சேரிப்போர் செய்யும் நாளும் வந்தன; இப்பொழுது தலைவன் வலிய என்பால் அன்பு கொள்ளுதலை அறியலாம்” என்று கூறியது.)
 364.    
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் 
    
வாளை நாளிரை பெறூஉ மூரன்  
    
பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி  
    
எற்புறங் கூறு மென்ப தெற்றென  
5
வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்  
    
துணங்கை நாளும் வந்தன வவ்வரைக்  
    
கண்பொர மற்றதன் கண்ணவர்  
    
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.  

என்பது வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.