பக்கம் எண் :


691


     (முடிபு) தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.

     (கருத்து) வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.

     (வி-ரை.) தலைவன் வரைந்து கொள்வதாக உறுதி கூறியும் நீட்டித்த காலத்தில் தோழி கூறியது இது. வண்டை நோக்கிக் கூறினாளாயினும், சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்துவதே அவள் கருத்து.

     வாழியோ: அசை நிலை; தும்பியால் முடித்துக்கொள்ளும் குறை யுடைமையின் அதனை வாழ்த்தியதுமாம். மணிச்சிறையென்னும்பாடத்திற்கு, நீலமணியைப் போன்ற சிறகென்று பொருள் கொள்க.

    ‘நன்மொழிக்கு அச்சமில்லை’ என்றது, தான் கூறப்புகுவது நன்மை பயப்பதென்னும் கருத்தை உண்டாக்கியது. துளரெறிந்தமையால் மண்ணின் துகள் மேனியிற் படிந்தது. துளர் - களைக்கொட்டு (மலைபடு. 122,உரை)

    தமரிற்றீராளென்றது, தலைவனால் வரையப்பட்டுத் தலைவனோடிருந்து இல்லறம் நடத்தற்குரியவள் இனும் தமரோடு வாழும் வாழ்க்கையையேயுடைய வளாயினாளென்னும் குறிப்பினது. மோ:முன்னிலையசை.

    தமரின்தீராள் - தமர் செய்யும் கொடுமை உயிர் நீக்குமள வினதா யிருப்பவும், இன்னும் வாழ்வாளாயினாளென்று பொருள் கொள்ளுதலும்ஒன்று; இக்கருத்து தமரது காப்புமிகுதி முதலிய கொடுமைகளைத்தலைவனுக்கு அறிவுறுத்துவது.

    நுண்டேர்போலவென்ற பாடத்திற்கு நுண்ணிய கைத்தொழிலையுடைய தேரைப்போலவெனப் பொருள் கொள்க. ஏ: ஈற்றசை.

    தும்பியை விளித்துக் கூறியதாக அமைத்தமையின் அசை செய்யுளைப் பாடிய புலவர் தும்பிசேர் கீரனாரென்னும் பெயர் பெற்றார் போலும்.

    ஒப்புமைப் பகுதி 1. அணிச்சிறைத் தும்பி: “அஞ்சிறைத்தும்பி” (குறுந். 2:1, ஒப்பு.) பி-ம். மணிச்சிறைத்தும்பி: கலி. 46:2.

    3. அண்ணல் நெடுவரை: குறிஞ்சிப். 54; அகநா. 75:8.

    8. பிரசந்தூங்கு மலை: குறுந். 273:5, ஒப்பு.

    7-8. தேனடைக்குக் கேடகம்: சீவக. 1561.

     மு. வண்டுவிடு தூது: நற். 277.

(392)
  
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “தலைவன் நின்னோடு பழகியகாலம் சிறிதாயினும் அது குறித்து எழுந்த அலர் பெரிதாயிற்று” என்றுதலைவிக்குக் கூறுவாளாய்த் தோழி வரைவின் இன்றியமையாமையை உணர்த்தியது.)