(முடிபு) முனிநர் சென்ற ஆறு அருஞ்சுரமென்பர்.
(கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.
(வி-ரை.) பாலை நிலத்ததாதலின் காற்று வெம்மையுடையதாயிற்று. திறல் - வலி; காற்று மிக்க வலியுடையதென்பது “விசும்பு தைவரு வளியும்... போல... வலியும்”, “வளிமிகின் வலியு மில்லை” (புறநா. 2: 3-8, 51:3) என்பவற்றாலும் அறியப்படும். கடுவளி - பெருங்காற்றெனலுமாம் (புறநா.55:20, உரை). பொங்கர் - மரக்கொம்பு; “உயர்ந்த பொங்கருயர்மர மேறி” (கலி. 75:6) என்பதன் உரையைப் பார்க்க. உழிஞ்சில் - வாகை (சிலப். 11:76, அடியார்). வற்றல் -பசுமையற வற்றிய காய். “முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற்றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” (சிலப். 11: 64-6) என்பவாதலின் குறிஞ்சி திரிந்த பாலையென்பாள், ‘மலையுடை யருஞ்சுரம்’ என்றாள்; “வரைபிளந் தியங்குநர், ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை” (கலி. 2: 7-8) என்பவாகலின் மலைகள் உடைந்த அருஞ்சுரமெனினும் ஆம். தான் சென்றறியாத தாதலின் ‘என்ப’ என்றாள். ‘முலையிடை முனிநர்’ என்றது இன்பந் துய்த்து ஈண்டு இராதே கொடுமையையுடைய பாலையிற் சென்று துன்ப முழப்பவராயினரென்று இரங்கிய நினைவிற்று (கலி.2: 11-22.)
‘அவர் சென்றது கடத்தற்கரிய சுரமென்பர்; அது கருதியே யான் ஆற்றேனாயினேன்’ என்று தலைவி உணர்த்தினாள்.
ஆறே: ஏ அசை நிலை.
(மேற்கோளாட்சி) மு. வழியருமை கேட்டவழித் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.).
ஒப்புமைப் பகுதி 1. கடுவளி: குறுந்.372:2; அகநா.1:17; புறநா.55:20. வெம்மையையுடைய கடுவளி: “விலங்குவெங் கடுவளி யெடுப்ப”, “காய்சினக் கடுவளி” (அகநா.71:17, 223:6). 1-2. காற்றால் உழிஞ் சில்வற்றல் ஒலித்தல்: குறுந். 7: 4-5, ஒப்பு. 3. மலையுடை யருஞ்சுரம்: “பன்மலை யருஞ்சுரம்”, “பன்மலை, வெவ்வறை மருங்கின் வியன்சுரம்” (அகநா. 203:11, 361: 14-5).
4. நகிலிடைத் துயிலுதல்: “இடைமுலைக் கிடந்து” (குறுந். 178:4); “துயிலி னிளமுலையார்” (கைந்நிலை, 38); “அவர்நம, தேந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவும்” (தொல். கற்பு. 6, ந. மேற்: ‘நாமவர்’); “நப்பின்னை கொங்கைமேல், வைத்துக் கிடந்த மலர்மார்பா” (திவ். திருப்பாவை, 19). “நம், இன்றுயின் முனிநர் சென்ற வாறே” (குறுந். 213: 6-7)
(39)
(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)