பக்கம் எண் :


104


(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகுங் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்தொழுகுந் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாயல்லை” என்று கூறி இரவுக் குறியை மறுத்தது.)
 47.   
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
    
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
    
எல்லி வருநர் களவிற்கு 
    
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 

என்பது இராவந்தொழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது.

    (முன்னிலைப் புறமொழி - கூறப்படும் செய்தியைக் கேட்டறிதற் குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல், வேறு ஒருவரை யேனும் பிறிதொரு பொருளை யேனும் விளித்துக் கூறுவது(தொல். கற்பு.26, ந.)

நெடுவெண்ணிலவினார்.

    (ப-ரை.) நெடு வெண் நிலவே - நீட்டித்தலையுடைய வெண்ணிலாவே, கரு கால் வேங்கை - கரிய அடியையுடைய வேங்கை மரத்தின், வீ உகு துறுகல் - மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், இரு புலி குருளையின் தோன்றும் - பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும், காட்டிடை - காட்டினிடத்து, எல்லி வருநர் களவிற்கு - இரவின்கண் வரும் தலைவரது களவொழுக்கத்திற்கு, நல்லை அல்லை - நன்மை தருவாய் அல்லை.

    (முடிபு) நெடுவெண்ணிலவே, காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை.

    (கருத்து) இனி இரவில் வருதல் தகாதாதலின் தலைவர் தலைவியை விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்.

    (வி-ரை.) வேங்கை, கருந்தோலிற் செம்பொறி யமைந்த உடலின தாகலின் கரிய பாறையும் அதன்மேல் உதிர்ந்த வேங்கை மலர்த் தொகுதியும் புலிக் குருளையின் தோற்றத்தைச் செய்தன; “புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர்” (ஐங்.396). காட்டில் வருங்கால் நிலாவொளியில் வேங்கை மலர் பரவிய துறுகல்லைப் புலியென்று எண்ணித் தலைவன் அஞ்சுதலுங் கூடும் என்பது குறிப்பு; “வான்கண் விரிந்த பகன்மரு ணிலவிற், சூரன் மிளைய சார லாராற், றோங்கன் மிசைஇய வேங்கை யொள்வீ, புலிப்பொறி கடுப்பத் தோன்றலின்” (அகநா. 228:8-11.) எல்லி -இரவு; “எல்லியம் போது வழங்காமை முன்னினிதே” (இனியது. 34.) காட்டிடை வரும்போது வழியிலுள்ள வேங்கை மலர் உக்க பாறையை வேங்கைக் குருளை என்று