பூங்கணுத்திரையார் (பி-ம். பூங்கணுத்தரையார்.) (பி-ம்) 5.‘நன்னுதற் பசலை’ 6. ‘நசையாடு’.
(ப-ரை.) தாதின் செய்த - பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட, தண் பனி பாவை - மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவையானது, காலை வருந்தும் - காலைப் பொழுதில் வருந்துதலாற் பிறந்த, கையாறு ஓம்பு என - செயலறுதலை ஒழிப்பாயாகவென்று, ஓரை ஆயம் - விளையாட்டையுடைய மகளிர் திரள், கூற கேட்டும் - சொல்லக் கேட்டபின்பும், இன்ன பண்பின் - இத்தகைய தன்மையையுடைய, இனை பெரிது உழக்கும் - வருத்தத்தை மிக அடையும், நன் நுதல் - நல்ல நெற்றியையுடைய தலைவியினது, பசலை நீங்க - பசலை நீங்கும்படி, காதலர் தமக்கு - தலைவர் மாட்டு, நசை ஆகு பண்பின் - இவளுக்கு விருப்பமாகும் தன்மையையுடைய, அன்ன ஒரு சொல் - அத்தகைய ஒரு சொல்லானது, இசையாது கொல் - இயலாதோ?
(முடிபு) ஆயம் கூறக்கேட்டும் உழக்கும் நன்னுதலின் பசலை நீங்க ஒரு சொல் காதலர் தமக்கு இசையாது கொல்?