(கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.
(வி-ரை.) தாது - பலவகைப் பொடி, தலைவி பாவையினிடத்து மிக்க விருப்பினளாதலின் (பெருங். 2. 15:112),‘பாவையின் கையாற்றைப் பாதுகாப்பாயாக’ என்றால் அவள் அதனை உடனே செய்வாளென்று மகளிர் நினைந்தனர். கேட்டும்: உம்மை உயர்வு சிறப்பு. இன்ன பண்பு என்றது தலைவனைக் காணாப்பொழுது பெரிதானமையின் அவன் பிரிவினால் துன்புற்றுப் பசலையும் படரும் கொண்டிருந்த இயல்பை. இனை - வருத்தம் (கலி.11:19, ந.) பசலை : தலைவனது பிரிவினால் உண்டாவது; இந்நூல்27-ஆம் செய்யுளின் விசேடவுரையைப் பார்க்க. நன்னுதலென்று வைத்து அந்நுதலை யுடையாளது பசலை யென்றமையின் நுதலும் பசலை கொண்டதெனக் கொள்க (குறுந்.87:4.)அன்ன ஒரு சொலென்றது வரைவேனென்று சொல்வதை. எப்பொழுதும் உடனுறையும் நிலையைத் தலைவி விரும்பினாளாக, அதற்கு ஏற்றது வரைந்து கொண்டு இல்லறம் நடத்துதலேயாதலின் அக்கருத்தை வெளியிடும் சொல்லை, ‘நசையாகு பண்பின் ஒரு சொல்’ என்றாள். தலைவன் வரைந்து கொள்வேன் என்று கூறும் வழக்கத்தை, ஐங்குறுநூறு, 92-ஆம் செய்யுளும் அதன் உரையும் விளக்கும். ஒரு சொல் - ஒப்பற்ற சொல்; ‘ஒரு சொல் இசையாது கொல்லோ’ என்ற சொற்கிடக்கை, ‘பல சொல்லி நயப்புணர்த்திப் பாராட்டும் தன்மை யினருக்கு இவ்வொருசொல் அரிதன்றே’ என்னும் குறிப்பையும் புலப்படுத்தியது.
அன்னம் என்று பிரித்து, அன்னமானது காதலருக்கு ஒரு சொல்லை இசையாதுகொலென்பதும் ஒருவாறு பொருந்தும்; ஆயினும் சிறப்புடைய தன்று.அன்னம் தூது செல்லல் : திருச்சிற்.191.
ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 1. தாதிற் செய்த பாவை:“தாதுசெய் பாவை” (அகநா.392:6.) செய்த பாவை: “செய்வுறு பாவை” (குறுந்.195:6.) தலைவியின் பாவை: குறுந். 114:1, 276:1, 278:3. 3. ஓரை ஆயம் :குறுந். 316:5, 401:3; நற். 68:1, 143:3; புறநா. 176:1.
(48)
(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.) 49. | அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து |
| மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப |
| இம்மை மாறி மறுமை யாயினும் |
| நீயா கியரென் கணவனை |
5 | யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. |
என்பது தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளி (பி-ம். நீங்கிய வழியப்பள்ளி) யிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.