பக்கம் எண் :


116


    பார்வைக்கும் பயிலுதற்கும் இனிமை தருதற்குரியதாகிய புன்கமலர் பரந்த மணற்பரப்பு, அஞ்சுதற்கேதுவாகிய தோற்றத்தைத் தரும் துறை யென்றமையால், விரைந்து மணம் செய்வாயென்னும் தெளிவைத் தந்து இனிமை பயப்பதற்குரியனவாகிய நின்சூள் இப்பொழுது வருத்தத்தைத்தருவனவாயினவென்னும் குறிப்புப் புலப்பட்டது.

    ஏகாரங்கள் அசை நிலை.

    (மேற்கோளாட்சி) 7. குறிஞ்சிக்கருப்பொருளில் ஒன்றாகிய தெய்வத்தின் வகை சூரரமகளிர் (தொல். அகத். 5, ந.)

    மு. தலைமகன் சூளுற்ற சூளுறவிற் சோர்வு கண்டு அழிந்து தோழி கூறியது (தொல். கற்பு.9., இளம்.); தீராத் தேற்றத்தைப் பின்னொரு கால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியது (தொல். களவு. 10, ந.11, இளம்.).

    ஒப்புமைப் பகுதி 1. எம் அணங்கின: குறுந். 119:4.

    3. வேலன் வெறியயர் களம்: “வேலன் றைஇய வெறியயர் களனும்” (முருகு.222); “வேலன், வெறியயர் வியன்களம்” (அகநா.98: 18-9); “வெறியயர் வெங்களத்து வேன்மகன்’’ (நாலடி. 16); ‘’வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து” (சிலப். குன்றக்.) வெறிக்களம்: மலைபடு. 150: குறிஞ்சிப்: 175. 2-3. பலமலர்கள் நிறைந்த இடம் வெறிக்களம் போலத் தோன்றுதல்: குறுந்.318:1-3. 2-4. புன்கின் மலருக்குப் பொரி: “பொரிப்பூம் புன்கு” (குறுந்.341:2; நற்.9:5; ஐங்.347:3, 368:2); பொரியுரு வுறழப் புன்குபூ வுதிர” (கலி.33:11); “பொரியெனப், புன்கவி ழகன்றுறை” (அகநா. 116:5-6); “புன்கு பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்” (திணைமொழி. 14); “பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு” (சிலப்.12: ‘செம்பொன்’); “பேசிற் செந்தலைய வெண்கறைய புன்கம் பொரியணிந்தனவே” (சீவக. 1649); “பொரியணிந்து புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்”, “பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே” (சூளா. 4:56, 6:1); “மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ் செய்யு மிழலை யாமே”, "பொரியேர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே” (தே. திருஞா.)

    4. வெண்பொரி சிதறி: முருகு.231.

    5. எக்கர் நண்ணிய துறை: குறுந்.349:2-3.

    6. நேரிறை முன்கை: ஐங்.493:4; குறிஞ்சிப்.231; கலி.51:10; மணி. 18: 130-33. 7. தலைவன் களவுக்காலத்திற் சூளுறுதல்: குறுந். 36:5: ஒப்பு.137: மு.6-7.முன்கைபற்றிச் சூளுறுதல்:“அரிய வஞ்சினஞ் சொல்லியும் பன்மாண், தெரிவளை முன்கை பற்றியும்” (அகநா. 175:7-8.) 5-7.துறையிற் சூளுறுதல்: ஐங்.53:1-4.சூள்: குறுந். 238:5, 384:4; ஐங். 31; கலி.75:21.

(53)
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலினால் உண்டாகும் ஏதத்தையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் வரைந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)