நெய்தற் கார்க்கியர் (பி-ம். கார்க்கியன், கார்க்கியார்.) (பி-ம்) 2. ‘பொங்கு பிதிர்த்திவலை’, ‘தைஇய’.
(ப-ரை.) இ சிறு நல் ஊர் - இந்தச் சிறிய நல்ல ஊரானது, மா கழி மணிபூ கூம்ப - கரிய கழியினிடத்திலேயுள்ள நீல மணி போன்ற பூக்கள் குவியும்படி, தூ திரை பொங்கு பிதிர் துவலையொடு - தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு, மங்குல் தைஇ - மேகத்தைப் பொருந்தி, கை அற - பிரிந்தோர் செயலறும்படி, வந்த - தைவரல் ஊதையொடு - தடவுதலையுடைய வாடைக் காற்றோடு, இன்னா உறையுட்டு ஆகும் - துன்பத்தைத் தரும் தங்குமிடத்தை யுடையதாகின்ற, சில்நாட்டு - சில நாட்களையுடையது.
(முடிபு) இச் சிறுநல்லூர் சின்னாட்டு.
(கருத்து) தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்.
(வி-ரை.) மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளி (சிறுபாண்.148), நெய்தல் (மதுரைக். 282) முதலியவற்றைக் கொள்க. இவை கூம்பவென்றமையின் மாலைப் பொழுதைக் கொள்க.
'இன்னாவுறையுட்டாகுஞ் சின்னாட்டம்ம இவ்வூர்' என்று ஊரின் மேல் வைத்துச் சொன்னாலும் தோழி நினைந்தது, 'தலைவி இன்னும் சின்னாளே இவ்வூரில் உயிர் வாழ்வாள்; அச்சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன' என்பதாகக் கொள்க; இதனால் தலைவனுக்கு விரைந்து வரைந்துகொள்வதன் இன்றியமை யாமையைக் குறிப்பித்தாள்.