பக்கம் எண் :


120


    இன்னாவுறையுட்டாதலும் சின்னாட்டாதலும் ஊரின்பாலுள்ள குறையினாலல்லவென்பதைப் புலப்படுத்தி, 'சிறு நல்லூர்' என்று சிறப்பித்தாள்.

    அம்மவும் ஏகாரமும் அசை நிலை.

    நெய்தனிலத்துக் கருப்பொருள்களை இதன்கண் அமைத்துப் பாடிய சிறப்பினால் இவ்வாசிரியர் தம் இயற்பெயராகிய கார்க்கியரென்பதனோடு நெய்தலென்னும் அடையையும் சேர்த்து வழங்கப் பெற்றார் போலும்.

    ஒப்புமைப் பகுதி 3. கையற வந்த ஊதை: குறுந். 197:3-4.

    2-3. ஊதையும் துவலையும்: குறுந். 86: 3-4.

    3-4. "இன்னா வுறையுட் டாயினு மின்பம், ஒருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாள், தம்பதி மறக்கும் பண்பி னெம்பதி" (அகநா.200: 4-6.)

(55)
  
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடம்படானாகித் தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய பொல்லாங்கையுடைய இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)
 56.   
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற் 
    
குளவி மொய்த்த வழுகற் சின்னீர் 
    
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர் 
    
வருகதில் லம்ம தானே 
5
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

    (கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல் (தொல். அகத். 15) பொல்லாங்கு - தீமை.)

சிறைக்குடியாந்தையார். (பி-ம். சிறைக்குடியாந்தை).

    (ப-ரை.) வேட்டம் செ நாய் - வேட்டையை மேற் கொண்ட செந்நாய், கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியதாகிய, குளவி மொய்த்த - காட்டுமல்லிகைப் பூ மூடிய, அழுகல் சில் நீர் - அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை, வளையுடை கையள் - வளையையுடைய கையளாய், எம்மொடு - உணீயர் - எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு, தான் - தலைவி, வருகதில் - வருக; வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் - எம் நெஞ்சின்கண் விரும்பிய பொருந்திய அத்தலைவி, அளியளோ, அளியள் - மிக இரங்கத் தக்காள்!