பக்கம் எண் :


122


(தாய் முதலியவர்களாற் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)
 57.   
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன 
    
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் 
    
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ 
    
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந் 
5
திருவே மாகிய வுலகத் 
    
தொருவே மாகிய புன்மைநா முயற்கே. 

என்பது காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    (காப்பு மிகுதி - தலைவியைப் புறத்தே செல்லவிடாமல் தாய் முதலியவர்கள் பாதுகாத்தலின் மிகுதி; 'தாய்துஞ்சாமை நாய் துஞ்சாமை ஊர்துஞ்சாமை காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் கூகை குழறல் கோழிகுரற் காட்டலென இவை' என்பர் (இறை. 29, உரை.)).

சிறைக்குடியாந்தையார்.

    (பி-ம்) 1. படினுமியாண்டு; 4.போகதில்ல.

    (ப-ரை.) தோழி, கடன் அறிந்து - செயக்கடவனவாகிய முறையை அறிந்து, இருவேம் ஆகிய - பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாகிய இருவேமாகப் பயின்று வந்த, உலகத்து - இவ்வுலகத்தில், ஒருவேம் ஆகிய புன்மை - பிரிவினால் ஒருவராகிய துன்பத்தினின்றும், நாம் உயற்கு - நாம் நீங்கித் தப்புதற்கு, பூ இடைபடினும் - பூவானது தம் இடையிலே பட்டாலும், யாண்டு கழிந்தன்ன - அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய நீர் உறை மன்றில் புணர்ச்சிபோல - நீரின்கண் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல, பிரிவு அரிதாகிய தண்டா காமமொடு - பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடுந உடன் உயிர் போகுகதில்ல - ஒருங்கே எம் உயிர் போவனவாகுக; இஃது எனது விருப்பம்.

    (முடிபு) ஒருவேமாகிய புன்மையினின்றும் நாம் உயற்கு உடன் உயிர் போகுகதில்ல.

    (கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.

    (வி-ரை.) மகன்றில்: இது நீர்வாழ் பறவைகளுள் ஒன்று; இப்பறவைகள் ஆணும் பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும்