மோசிகீரனார் (பி-ம். மோசிகீரன்). (பி-ம்) 1. பரதவர்; 2. அறலைக், அதலைக்; 4.நறு நுதறா வெனின், தாவெ மறப்பரோ மற்றெனா.
(ப-ரை.) பதலை பாணி - ஒருகண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய, பரிசிலர் கோமான் - பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது, அரலை குன்றம் - அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள, அகல்வாய் - அகன்ற வாயையுடைய, குண்டுசுனை குவளையொடு - ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும், நின் நறு நுதல் - நினது நல்ல நெற்றியை, மறப்பரோ - தலைவர் மறப்பாரோ? முயலவும் - பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும், சுரம் பல விலங்கிய அரு பொருள் - பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள், நிரம்பாவாகலின் - முற்றக் கை கூடாவாதலின், நீடல் இன்று - முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.
(முடிபு) நறுநுதல் மறப்பரோ? பொருள் நிரம்பா ஆகலின் நீடல் இன்று.
(கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.