பக்கம் எண் :


146


(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)
 71.   
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே  
    
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் 
    
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் 
    
கல்கெழு கானவர் நல்குறு மகளே. 

என்பது பொருள்கடைக் கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

    (கடைக் கூட்டுதல் - துணிதல், செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது.)

கருவூர் ஓதஞானி.

    (பி-ம்) 4.கானவனல்குறூஉமகளே, நல்குவா மகளே.

    (ப-ரை.) நெஞ்சே, அரும்பிய சுணங்கின் - தோற்றிய தேமலையுடைய, அம் பகடு இள முலை - அழகிய பெருமையையுடைய இளைய நகிலையும், பெரு தோள் - பெரிய தோளையும், நுணுகிய நுசுப்பின் - நுண்ணிதாகிய இடையையும் உடைய, கல்கெழு கானவர் - கற்கள் பொருந்திய காட்டையுடையவர், நல்குறு மகள் - பெற்ற மகள், மருந்து எனின் மருந்து - காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று கருதுங்கால் எனக்குப் பரிகாரமாவாள்; வைப்பு எனின் வைப்பு - போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமுமாவாள்.

    (முடிபு) மகள், மருந்தெனின் மருந்து; வைப்பெனின் வைப்பு.

    (கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.

    (வி-ரை.) இவளைப் பிரியின் காமநோய்க்கு மருந்தில்லை யென்பதும், அம்மருந்தும் யான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வமும் இவளேயாதலின் செல்லுதல் தவிர்வேனென்பதும் புலப்படுகின்றன, மருந்து - அமிழ்தமும் ஆம். வைப்பு - சேம நிதி. மருந்தே, வைப்பே: ஏகாரங்கள் அசைநிலை: தேற்றேகாரங்களுமாம்.

    பகடு - பெருமை (புறநா. 68:5, உரை). தோள்பெருத்தலும் இடை சிறத்தலும் மகளிர்க்கு அழகு; "தோள்.... எனப் பெருகி, நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி" (கலி. 108:2-3). கல் - மலையுமாம். கல்கெழு கானவர் நல்குறு மகளென்பது அனைத்தும் ஒரு பெயராய் நின்று முலை முதலியவற்றோடு இயைந்தது. மகளே: ஏகாரம் அசை நிலை.