பக்கம் எண் :


147


    தலைவியின் உறுப்புநலங் கூறினான், இத்துணை நலனுடையாளைப் பிரிதல் அரிதென்று நினைந்து.

    (மேற்கோளாட்சி) 4. கல்லைக்கெழீஇயினவென இரண்டனுருபு விரிந்தது (தொல். குற்றியலுகரப். 75, இளம், 76, ந.).

    மு. தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (இறை. 51; தமிழ்நெறி. 24); இனிதுறு கிளவிபற்றி ஏனை உவமம் வந்தது (தொல். உவம; 28, பேர்.); நிகழ்காலமென்னும் உறுப்பு வந்தது (தொல். செய்யுள். 202, பேர். ந; இ.வி.575); பொருளென்னும் உறுப்பின்றி வந்தது (தொல். செய்யுள். 211, பேர், ந.); எமக்கென்னும் சொல் பின்னும் முன்னும் எஞ்சிநின்றது (தொல். எச்ச. 45, சே. ந; இ.வி. 351); இயற்சீரான் வந்த ஆசிரியப்பா (யா.வி. 15).

    ஒப்புமைப் பகுதி 1. மருந்து: நற். 384: 10-11. 2.சுணங்கையுடைய நகில்; சிறுபாண். 24-6; அகநா. 319:9; புறநா. 337:21-2, 352:1 3-4. அரும்பிய சுணங்கு: அகநா. 253: 22. 3.பெருந்தோள்: "பெருந்தோட் குறுமகள்" (குறுந். 95:3); "பெருந்தோண் மடந்தை" (சிலப். 3:6). நுணுகிய நுசுப்பு: "நுழைசிறு நுசுப்பு" (குறுந். 159:2.) பெருந்தோளும் நுணுகிய நுசுப்பும்: "பெருந்தோ ணுணுகிய நுணுப்பிற், றிருந்திழை யரிவை" (அகநா. 374:17-8); "பெருந்தோட் சிறுமருங்குற் பேரமர்க்கட் பேதை" (நன். 402, மயிலை. மேற்.).

(71)
  
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)
 72.   
பூவொத் தலமருந் தகைய வேவொத் 
    
தெல்லாரு மறிய நோய்செய் தனவே 
    
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப் 
    
பரீஇ வித்திய வேன்ற் 
5
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே. 

என்பது தலைமகன், தன் வேறுபாடு கண்டு வினாய பாங்கற்கு உரைத்தது.

மள்ளனார்.

    (பி-ம்.) 1.தலம்வருந்.

    (ப-ரை.) தேமொழி - இனிய மொழியினையும், திரண்ட மெல்தோள் - பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பரீஇ வித்திய ஏனல் - பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண், குரீஇ ஓப்புவாள் - அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டு கின்றவளது, பெரு மழை கண் - பெரிய குளிர்ச்சியையுடைய