கிள்ளிமங்கலங்கிழார். (பி-ம்) 2.செல்வ, னென்ப வோங்கல்வரை மார்பன், செல்வ வென்பவே, என்பநங்கல்வரை, என்பவோங்கல் வெற்பர்; 4.தைஇய; 5.தூங்கும்; 6.யற்சிரம்.
(ப-ரை.) தோழி---, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை, பெரு களிறு செவியின் மான - பெரிய களிற்றினது செவியை ஒப்பத் தோன்றும்படி, தைஇ - தடவி, தண்வரல் வாடை - தண்ணிய வரவையுடைய வாடைக் காற்று, தூக்கும் - அசைத்தற்குரிய, கடு பனி அச்சிரம் - மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில், நடுங்கு அஞர் உற - நடுங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி, கல் வரை மார்பர் - கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர், காந்தள் வேலி ஓங்கு மலை நல்நாட்டு - காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து, செல்ப என்ப - என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்.