(முடிபு) அச்சிரக் காலத்தில் அஞருறக் கல்வரை மார்பர் செல்ப வென்ப.
(கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.
(வி-ரை.) இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு. என்ப வென்றாமையால் தான் முன்னரே அறிந்தமையை விளக்கினாள். சிலம்பிற் சேம்பு: மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு. தூக்கும் - அசைக்கும் (கலி. 84:1, உரை.) கடும்பனி - புதுப் பனியுமாம். அச்சிரம் - முன்பனி.
‘தலைவர் செல்வதைத் தடுப்பது நின் கடமையாக இருப்ப, அதைச் செய்யாமல் அயலாரைப் போல அவர் பிரிவை உணர்த்த வந்தது தகுதியன்று’ என்பது தலைவியின் கருத்து; ‘அழுங்குவித்து வந்து கூறற்பாலையாய நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாயெனப் புலந்து கூறியவாறு’ (குறள். 1157, பரிமேல்.) என்பது இக்கருத்தை வலியுறுத்தும். என்பவோ: ஓகாரம் இரக்கக் குறிப்பு; அசைநிலையுமாம். செவியின்மான: உவமவுருபு ஐந்தனுருபோடு வந்தது (குறுந். 9:6.) உறவே: ஏ அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 1. காந்தள்வேலி மலைநாடு: குறுந். 245:3-4; “கைம்மலர்க் காந்தள் வேலிக் கணமலை” (சீவக. 208.)
3. சிலம்பிற் சேம்பு; அகநா. 178:4 3-4. பெரிய இலைக்குக் களிற்றுச் செவியை உவமை கூறுதல் மரபு: குறுந். 246:2; நற்.310:2.
5. தண்வரல் வாடை: குறுந்.35:5, ஒப்பு.
6. கடும்பனி யச்சிரம்: குறுந். 68:3, ஒப்பு. 82:6; நற். 86:4; சிலப். 14:102-5. 5-6. வாடையும் பனியும்: “தண்பனி வடந்தை யச்சிரம்” (ஐங். 223:4); “பனிகடி கொண்ட பண்பில் வாடை”, “வடந்தை தூக்கும் வருபனி யற்சிரம்” (அகநா. 235:15, 378:13). 2-6. தலைவன் பிரிவினால் அச்சிரக் காலத்தில் தலைவி துன்புறல்: குறுந். 68:3. ஒப்பு.
(76)
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் ஏதத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.) 77. | அம்ம வாழி தோழி யாவதும் |
| தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத் |
| துலந்த வம்பல ருவலிடு பதுக்கை |
| நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் |
5 | அரிய கானஞ் சென்றோர்க் |
| கெளிய வாகிய தடமென் றோளே. |
என்பது பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.