நக்கீரனார் (பி-ம். நக்கீரர்). (பி-ம்) 6. ‘பெரும் பேதைத்தே’.
(ப-ரை.) பெரு வரை மிசையது - பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய, நெடு வெள் அருவி - நெடிய வெள்ளிய அருவியானது, முது வாய் கோடியர் - அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது, முழவின் ததும்பி - முழவைப்போல ஒலித்து, சிலம்பின் இழிதரும் -பக்கமலையின்கண் வீழும், இலங்கு மலைவெற்ப - விளங்குகின்ற மலைகயையுடைய தலைவ, காமம் - காமமானது, யாவதும் - சிறிதும், நன்றென உணரார் மாட்டும் - இது நன்மையென உணரும் அறிவில்லா தாரிடத்தும், சென்று நிற்கும் - சென்று தங்குகின்ற, பெரு பேதைமைத்து -பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது, நோதக்கன்று - வெறுக்கத்தக்கது.
(முடிபு) வெற்ப, காமம் பெரும்பேதைமைத்து; நோதக்கன்று.
(கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.
(வி-ரை.) பெருவரை - அளக்கலாகா அளவும் பெருமையும் வறப்பினும் வளந்தரும் வண்மையு முடைய மலை மிக உயர்ந்த மலையாதலின் அருவியும் நெடியதாயிற்று, முதுவாய்க் கோடியர் - அறிவு வாய்த்தலை யுடைய கூத்தர் (பட். 253, ந.); அறிவுமுதிர்ந்த வாய்மையையுடைய கூத்தரெனலும் (முருகு. 284, ந; புறநா. 48:7) ஆம்.
ததும்புதல் - ஒலித்தல் (கலி. 70:10, ந.); பெருங். 1. 46: 246; தே. 2554. வெற்பனென்பது குறிஞ்சிநிலத் தலைவனென்னும் பொருளைத் தந்து இடுகுறி மாத்திரையாய் நின்றது (திருச்சிற். 128, பேர்.) காமம் - தலைவியின்பாலுள்ள பெருவிருப்பம். உணராரென்றது, காமநுகர்ச்சிக்குப் பொருளாகியவரை; இங்கே தலைவியைச் சுட்டியது.