பக்கம் எண் :


160


(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)
 79.    
கான யானை தோனயந் துண்ட  
    
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை 
    
அலங்க லுலவை யேறி யொய்யெனப் 
    
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
5
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச் 
    
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் 
    
கொல்லே மென்ற தப்பற் 
    
சொல்லா தகறல் வல்லு வோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச்சொல்லியது.

குடவாயிற் கீரனக்கன் (பி-ம். கீரத்தனார்.)

    (பி-ம்) 6. ‘சேர்ந்தனர்’ 7. ‘கொல்லோமென்ற’ 8. ‘சொல்லாதேகல்’.

    (ப-ரை.) தோழி, யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல் - யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால், சொல்லாது அகறல் வல்லுவோர் - சொல்லாமற் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர், கானம் யானை - காட்டு யானையால், தோல் நயந்து உண்ட - பட்டை விரும்பி உண்ணப்பட்ட, பொரிதாள் ஓமை - பொறந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை - காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில், ஏறி -, ஓய்என - ஒய்யென்று, புலம்புதரு குரல - தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகி, புறவு பெடை பயிரும் - ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும், அத்தம் நண்ணிய - பாலைநிலத்திற் பொருந்திய, அம் குடி சிறு ஊர் - அழகிய குடிகளையுடைய சிற்றூரில், சேந்தனர் கொல் - தங்கினரோ?

     (முடிபு) சொல்லாதகறல் வல்லுவோர் சேந்தனர்கொல்?

     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது. புலம்பு - தனிமையும் வருத்தமும்.