ஓ, தாம், ஏ: அசை நிலைகள்.
பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினாரேல், ஆண்டுள்ள நிகழ்ச்சியும் என்பால் வந்து ஒன்றுதலாகிய தம் கடமையை அறிவுறுத்துமன்றே யென்ற குறிப்பினது (ஐங். 333) ஒல்லேம் - உடம்படேம். நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.
தலைவர் சொல்லாது அகலுதலுண்டென்பதை இந்நூல் 43-ஆம் செய்யுளாலும் அதன் உரை முதலியவற்றாலும் உணரலாகும். வல்லுவோ ரென்றது அங்ஙனம் பிரிந்து செல்லுதல் நெஞ்சில் வன்மையிருப்பினன்றி இயலாதென்னும் குறிப்பினது.
(மேற்கோளாட்சி) 6-8. தலைவன் சொல்லாது பிரிந்தது (தொல். கற்பு. 43, ந.)
மு. ‘புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந், திடைச்சுரத்திறைச்சியும் வினையுஞ் சுட்டி, அன்புறு தக்க கிளத்த றானே, கிழவோன்செய்வினைக் கச்ச மாகும்’ ஆதலின், ‘புலம்புதரு குரலவாய்ப் புறவினைப்பெடை அழைக்கும் வருத்தங்கண்டு வினைமுடியாமல் வருவரோவெனஅஞ்சியவாறு காண்க’ (தொல். கற்பு. 7, இளம். ந.)
ஒப்புமைப் பகுதி 2. ஓமை: ‘‘புன்றா ளோமைய சுரனிறந் தோரே” (குறுந். 260:8); “புல்லரை யோமை “ (ஐங். 316:4.) 1-2.்யானை ஓமைத்தோலை உண்ணல்; “முளிசினை, ஓமைக் குத்திய வுயர்கோட் டொருத்தல்” (குறுந். 396:3-4); “கயந்தலை மடப்பிடி யுயங்குபசி களை இயர், பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை”, “பசிப்பிடி யுதைத்த வோமைச் செவ்வரை”, “பணைத்தா ளோமைப்படுசினை..... ஒடித்துமிசை கொண்ட வோங்குமருப் பியானை” (நற். 137: 6-7, 279:7, 318:2-5.)
3. அலங்கல் உலவை: அகநா. 199:6. ஒய்யென: கலி.37:18.
4. புறவு,பெடையைப் பயிர்தல்: குறுந். 285:5.
5. மு. குறுந். 41:3, ஒப்பு, அங்குடிச் சீறூர்: நற். 343:2; புறநா.324:8. 2-4. ஓமையின்மேற் பறவையிருத்தல்: குறுந். 207:2-4; ஐங்.321:1-2. 4-5. புறவுள்ள பாலைநிலச் சீறூர்: “புறவுசேர்ந் திருந்த, புன்புலச் சீறூர்” (புறநா. 328:1-2).
7. தப்பல்: குறுந். 121:3, 292:2; நற். 203:10; அகநா. 196:9.
8. சொல்லாதேகல்: திருச்சிற். 270.
(79)
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட பரத்தை அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)