அச்சிரம் அவர் வாராமையின் பொறுத்தற்கரியதாயிற்று. அவர்வரின் அரியதாகாது; இந்நூல் 68-ஆம் செய்யுளைப் பார்க்க.
குறவன், ஒருமுறை யறுத்த கதிராற் பயன் பெற்றதன்றிப் பின்னும் மறுகாலிற் கிளைக்கும் கதிராலும் அதனோடு அவரையினாலும் பயனைப் பெறுதற்குரிய அச்சிரமென்றது, தலைவன் முன் இன்புற்றதன்றி மீண்டும் இப்பொழுது வந்து என்பாற் பெறும் இன்பத்தையும் செய்வினை முடித்த இன்பத்தையும் பெறுதற்குரியனென்னுங் குறிப்பினது.
ஒப்புமைப் பகுதி 1. தலைவன் தலைவியின் கூந்தலை அழகுபடுத்தல்: நற்.214:4-5. வாருறு வணர்கதுப்பு: “வாருறு வணரைம்பால்” (கலி. 58:1.) வணர் கதுப்பு: “வணர்சுரி யைம்பாலோய்” (சிலப். 7:31). கதுப்பு உளர்தல்: “ஒலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி” (அகநா. 102: 5 ). கதுப்பு - பெண்பால் மயிர்; குறுந். 190:1, 246:6, 312:6; குறள். 1105, உரை. தலைவன் தலைவியின் கூந்தலை உளர்தல்: “நெரிகுரற், சாந்தார் கூந்த லுளரி..... மனைவயினிருப்பவர்” (அகநா. 389:1-10). தலைவன் தலைவியின் புறஞ்சேர்தல்: “தாழிருங் கூந்தலென் றோழியைக் கைகவியாச், சாயலின் மார்பன் சிறுபுறஞ் சார்தர” (கலி. 42:29-30); “நங் காதலி, உயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே”, “சிறுபுறங் கவையின னாக” (அகநா. 19:18-9, 26:23, 32:9.).
2. அழாஅல்: குறுந். 135:4 தலைவன் தலைவியினது கண்ணீரைத் துடைத்தல்: (குறுந். 4:2); “பன்னாள், அழுதகண்ணீர் துடைத்த கை” (தண்டி. 114, மேற்.) தலைவனது பிரிவால் தலைவி அழுதல்: குறுந். 11:2, 22:1, 307:9, 357:1-2, 365:2; ஐங். 18:3 - 4 , 334:5, கலி.70:11. 4-5.சிறுதினை மறுகாலில் அவரை படர்தல்: “கொய்பத முற்றன குலவுக்குர லேனல், விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை” (மலைபடு. 108-10); “சிறுதினை கொய்த விருவி வெண்காற், காய்த்த வவரை” (ஐங்.286: 1-2); ‘‘அவரை பொருந்திய பைங்குர லேனல்’’ (ஐந். எழு. 1-2). அவரை மறுகாலில் விளைதல்: ஐங். 286:1-2; கலி. 139. 6. அரும்பனி யச்சிரம்; குறுந். 68:3, ஒப்பு. 5-6.அச்சிரக்காலத்தில் அவரை பூத்தல்: “ அவரைப் பைம்பூப் பயில..... சிதர்சினை தூங்கு மற்சிர வரைநாள்” (அகநா. 294:9-11).
(82)
(வரைவுக்குரிய முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.) 83. | அரும்பெற லமிழ்த மார்பத மாகப் |
| பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை |
| தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும் |
| தீம்பழந் தூங்கும் பலவின் |
5 | ஓங்குமலை நாடனை வருமென் றோளே. |
என்பது தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திச் (பி-ம். உணர்த்திய) செவிலியைத் தோழி வாழ்த்தியது.