மோசிகீரன். (ப-ரை.) (ப-ரை.) கழல் தொடி ஆய் - உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது, மழை தவழ் பொதியில் - மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான, வேங்கையும் காந்தளும் நாறி - வேங்கை மலரினது மணத்தையும் காந்தள் மலரினது மணத்தையும் வீசி, ஆம்பல் மலரினும் - ஆம்பல் மலரைக் காட்டிலும், தண்ணியள் - குளிர்ச்சியையுடையளாகிய என்மகள், பெயர்த்தனென் முயங்க - யான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீட்டும் தழுவும் காலத்து, யான் வியர்த்தனென் என்றனள் - நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்; அது துனி ஆகுதல் - அங்ஙனம் யான் தழுவியது அவளுக்கு வெறுப்புண்டாக்குதற்குக் காரணமாதலை, இனி அறிந்தேன் - அவள் கூறிய அக்காலத்தே அறிந்திலேனாயினும் இப்பொழுது அறிந்தேன்.
(முடிபு) தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள்; அது துனியாகுதலை இனி அறிந்தேன்.
(கருத்து) தலைவி எம்பால் வெறுப்புற்று ஒரு தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே அறிந்திலன்.
(வி-ரை.) பெயர்த்தனென் என்றமையால் முன் ஒருமுறை தழுவினாளென்றது பெறப்பட்டது. அங்ஙனம் தழுவிய பழக்கத்தால் செவிலி மீட்டும் தழுவினாள். தலைவியை அருகில் துயிலச் செய்தல் செவிலியர் வழக்கம். வியர்த்தனெனென்றது, வியர்த்தனெனாதலின் நீ முயங்கற்கவென்ற குறிப்பினது.