மதுரைக் கதக்கண்ணன். (பி-ம்) 3. ‘கொல்லுந்’, ‘சொல்லுந்’, ‘துன்னருஞ் சோலை’.
(ப-ரை.) தோழி-----, ஒலி வெள் அருவி - ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன், சிறு கண் பெருகளிறு - சிறிய கண்ணையுடைய பெரிய களிறு, வய புலி தாக்கி - வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது, தொல் முரண் சோரும் - தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய, துன் அரு சாரல் -மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே, நடுநாள் வருதலும் வரூஉம் - இடையிரவில் வருதலையும் செய்வான்; நாம் வடு நாணலம் - அங்ஙனம் அவன் வருதலி னால் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.
(முடிபு) தோழி, மலைநாடன் வருதலும் வரூஉம்; நாம் வடு நாணலம்.
(கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.