பக்கம் எண் :


188


கானா தீயுங் கவிகை வண்மை” (புறநா. 54:6-7); “மழையொன்று வண்டடக்கை” (தொல். உவம. 11, பேர். மேற்.); “எழிலிவான மெள்ளினன் றரூஉங், கவிகை வண்கை”, “மழைவிழை தடக்கை” (தொல். உவம. 14, பேர். மேற்.); “மழைதழீஇய கையாய்” (சீவக. 2779 )

    6. நெடுந்தேரஞ்சி: “கடும்பரிப் புரவி நெடுந்தே ரஞ்சி” (அகநா. 352:12)

    7-8. கொன்முனை இரவூர் துஞ்சாமை: “பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே” (குறுந். 292:8); “துஞ்சாக் கண்ண வடபுலத்தரசே” (புறநா. 31:17); “மறங்கால்வே லண்ணல் வரும்வருமென்றேங்கி, உறங்கா வடவேந்த ரூர்” (சிலாசாஸனப் பாடல்)

(91)
  
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் பார்ப்புக் களுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)
 92.    
ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்  
    
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை  
    
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த  
    
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய  
5
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே  

என்பது காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது.

     (கழிபடர் கிளவி - மிக்க துன்பத்தைப் புலப்படுத்தும் சொல்.)

தாமோதரன்.

    (பி-ம்) 3. ‘மரத்த’, ‘மாத்த’, ‘மராத்த’; 5.’இரை கொண்டவையும்’

    (ப-ரை.) ஞாயிறு பட்ட - கதிரவன் மறைந்த, அகல் வாய் வானத்து - அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், கொடு சிறை பறவை - வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், இறை உற ஓங்கிய - தாம் தங்கும்படி உயர்ந்த, நெறி அயல் மரா அத்த - வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும், பிள்ளை - குஞ்சுகளின், உள் வாய் செரீஇய - வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரை கொண்டமையின் - இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், செலவு விரையும் - விரைந்து செல்லும்; அளிய - அவை இரங்கத்தக்கன.

    (முடிபு) பறவை செலவு விரையும்; அளிய.

    (கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.

    (வி-ரை.) படுதல் - மறைதல்; “படுசுட ரமையம்” (அகநா, 48:23) என்பது காண்க.