(ப-ரை.) தோழ-----, மால் வரை இழிதரும் -பெரிய மலையினிடத்து வீழும், அருவி-----, கல் முகை ததும்பும் - பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும், பல் மலர் சாரல் - பலமலரையுடைய சாரலில் உள்ள, சிறு குடி குறவன் - சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரு தோள் குறுமகள் - பெரிய தோளையுடைய சிறிய மகளினது, நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மை, தீ ஓரன்ன என் உரன் அவித்தன்று - தீயை ஒத்த என் வலியைக் கெடச் செய்தது.
(முடிபு) குறுமகளது சாயல் என் உரனை அவித்தன்று.
(கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.
(வி-ரை.) தோழவென்னும் விளி முன்னத்தாற் பெறப்பட்டது. கல்முகை - மலைமுழைஞ்சுமாம். ததும்புதல் - ஒலித்தல். பன்மலர்ச் சாரலென்றான், இயற்கைப் புணர்ச்சி பெற்றவிடம் அதுவாதலால். பெருந்தோள்: மகளிருக்குத் தோள் பெருத்தல் அழகு; குறுந். 71, வி-ரை. ஓரன்ன - ஒரு தன்மையையுடைய (தொல். நூன். 2, இளம்.); ஒத்த