பக்கம் எண் :


166


(தலைவன் வரையாமல் நெடுநாள் இருப்ப வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் வரையும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)
 97.   
யானே யீண்டை யேனே யென்னலனே  
    
ஆனா நோயொடு கான லஃதே 
    
துறைவன் றம்மூ ரானே  
    
மறையல ராகி மன்றத் தஃதே.  

என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

வெண்பூதி.

    (பி-ம்.) 1. ‘யென்னலன்’.

    (ப-ரை.) தோழி-----, யான் ஈண்டையேன் - நான் இவ்விடத்தில் தனியே உள்ளேன்; என் நலன் ஆனா நோயொடு கானலஃது - எனது பெண்மைநலம் என்னின் நீங்கி அமையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையினிடத்தது; துறைவன் தம் ஊரான் - தலைவன் தனது ஊரினிடத்துள்ளான்; மறை - எம்மிடையே உள்ள மந்தணமாகிய நட்பைப் பற்றிய செய்தியானது, அலர் ஆகி - பலர் அறியும் பழிமொழியாகி, மன்றத்தஃது - பொதுவிடத்தின்கண் பரவியுள்ளது.

    (முடிபு) யான் ஈண்டையேன்; என் நலன் கானலஃது; துறைவன் தம்மூரான்; மறை மன்றத்தஃது.

    (கருத்து) என் நலனுண்ட தலைவர் இன்னும் வரைதற்குரிய முயற்சியைச் செய்தாரல்லர்.

    (வி-ரை.) யானென்றது தலைவனால் வரைந்து கொள்ளப்பட்டு அவனுடன் இருத்தற்குரிய யானென்றும், என் நலனென்றது என்னோடு உடனிருந்து சிறப்புத் தருதற்குரியதென்றும் கொள்ளக் கிடந்தன. நலன் கானலஃதென்றது, நெய்தற்கண் நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியைச் சுட்டியபடி. துறைவன் - நெய்தனிலத் தலைவன். தலைவனும் அவன் சுற்றத்தாரும் வாழுமிடமாதலின் அவரையு முளப்படுத்தித் தம்மூரா னென்றாள்.

    மறை - வெளிப்படாதிருந்த நட்பைப் பற்றிய செய்தி; ‘தோழிநம் மறையே’ (குறுந். 333:6) என்று பின்பும் வருதல் காண்க; “உட்கரந் துறையு முய்யா வரும்படர், செப்பல் வன்மையின்” (குறிஞ்சிப். 11-2) என்று கூறுவராதலின் மறையென்றாள். மன்று - பொதுவிடம்; இங்கே தந்தையையும் தன்னையரையும் குறித்தது (குறள் 1138 பரிமேல்.)

    என்நலன் என்பாலும் யான் தலைவன்பாலும் இருக்கப் பெற்று இன்புற வேண்டியிருப்ப அந்நிலை பெற்றிலேனென்று இரங்கினாள். மறை வெளிப்பட்டுத் தமர் தலைவனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தும்