(உலாப் போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொது வுண்பர் - பெண்தன்மையுடையவரெல்லாரும் தம் கண்ணாற்பொதுவாக நுகர்வர்; நின்மார்பு நண்ணேன் - ஆதலால், அவர் நுகர்ந்த எச்சிலாகிய உன் மார்பைப் பொருந்தேன். முடிசூட்டு நாளன்றும் வெற்றிவிழா நாளன்றும் அரசன் தேரேறித் தன் தலைநகரத் தேர் மறுகுகளில் உலாவரும்போது, பேதை முதலிய எழுவகைப்பருவமகளிரும் அவன்மீது காதல் கொள்வதாகப் பாடுவது உலா எனும் பனுவல். "ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, " (தொல். 1013) பரத்தையர் கற்பு நிறை நாண் முதலிய நற்குணங்களின்றிப் பெண்வடிவு மட்டுங் கொண்டவர் என்னுங் கருத்தாற் ' பெண்ணியலார் என்றாள். பொதுவுண்டல் ஒருங்கு நோக்குதல். இதனாற் பரத்தமை புலவிநுணுக்கத்தில் தலைமகன்மேல் ஏற்றிக் கூறப்படுவதல்லது, உண்மையாக நிகழ்வதன்றென்றும், திருவள்ளுர் கூறும் இன்பத்துப்பாலிற்குரியதன் றென்றும் அறிந்துகொள்க.
|