பொருட்பால் அரசியல் அதிகாரம் 40. கல்விஅஃதாவது, அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவை இலக்கணநூல், கணிதநூல், வனப்பியல், வரலாறு, அறநூல் அரசியல்நூல், போர்நூல் முதலியன. இவற்றுள் அரசியல் நூலும் போர்நூலுந்தவிர ஏனையவெல்லாம் எல்லார்க்கும் பொதுவாம். அரசியல் நூல் அமைச்சர்க்கும் போர்நூல் படைமறவர்க்கும் அரசர்க்குப் போன்றே சிறப்பாக வுரியனவாம். திருவள்ளுவர் வேத்தியலை அடிப்படையாகவைத்தே பொதுவியற்கும் பொருந்துமாறு பொருளீட்டு முறையைக் கூறுவதால், இங்குக் கல்வியென்றது எல்லார்க்கும் பொதுவாம். எல்லார்க்குமுரிய பொதுக்கல்வியும் சில தொழில்கட்குரிய சிறப்புக்கல்வியும் கற்றபின்பே நாகரிக மக்கள் பொருளீட்டுதலை மேற்கொள்ள வேண்டுமென்பது கருத்து. பொருளீட்டுதலாவது தத்தம் தொழிலைச் செய்தல். முந்தின அதிகாரத்தில் தூங்காமை கல்வி என்னுங் குறளிலுள்ள 'கல்வி' என்னுஞ்சொல்லால், இவ்வதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. |