காஞ்சனமாலை
224. வேய்மிகு தடக்கை தன்னால்
வியந்துபந் துடனே யேந்திக்
காய்பொனின் கலன்க ளார்ப்பக்
கார்மயி லாட்டம் போல
ஆயிரத் தைஞ்ஞா றேற்றி
யடித்தன ளகல வப்பால்
ஆய்புகழ்ப் பதுமை தாதி
யயிராப திபந்து கொண்டாள்.
(இ - ள்.) காஞ்சனமாலை மூங்கிலினும்
அழகுமிக்க தன் கையால் யாவரும் வியக்கும்படி பந்துகளை
ஏந்திக்கொண்டு, உலையிற் காய்ந்த தனது பொன்னணிகலன்கள்
ஆரவாரிக்கும்படி கார்காலத்து மயிலாடுமாறு போல ஆயிரத்தைந்நூறு
கையாக ஏற்றியடித்துச் சென்றனளாக; அப்பால் ஆராய்தற்கியன்ற
புகழையுடைய பதுமாபதியின் தோழியாகிய ‘அயிராபதி’என்பவள்
வந்து பந்தினைக் கொண்டனள் என்க. வியந்து - வியப்ப.
(39)
அயிராபதி
225. சீரேறு மிமில்போற் கொண்டைச்
சில்வண்டுந் தேனும் பாடப்
பாரோர்க ளினிது நோக்கும்
பல்கலஞ் சிலம்போ டார்ப்ப
ஈராயி ரங்கை யேற்றி
யிருகரத் தடித்து விட்டாள்
தோராத வழகி தத்தை
தோழி விசுவ லேகை வந்தாள்.
(இ - ள்.) அயிராபதி தானும் சிறப்புமிகும்
காளையினது திமில்போன்ற தனது கொண்டையின்கண்
சிலவாகிய ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் இசைபாடாநிற்ப,
உலகினர் வியந்து இனிது கூர்ந்து நோக்குதற்குக் காரணமான
தனது பல்வேறணிகலங்களும் சிலம்பினோடு சேர்ந்து
ஆரவாரிக்கும்படி இரண்டாயிரங்கையாக ஏற்றித் தனது
இரண்டு கைகளாலும் இடையறாதடித்து நிறுத்தினளாக; அப்பால்,
தோலாத பேரழகுடைய வாசவதத்தையின் தோழியாகிய
விச்சுவலேகை என்பவள் களத்தில் வந்தனள் என்க.
சீர் ஏறும் இமில் என்க. (40)
|