பக்கம் எண் :

102உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


விச்சுவலேகை

226. கருங்குழ னெடுவேற் கண்ணாள்

காரிகை பந்தெ டுத்துப்

பெருங்கல னினிதி னார்ப்பப்

பெய்வளை கலக லென்ன

ஒருங்குமுன் கையின் மீதி

லோரைஞ்ஞூ றடித்து விட்டாள்

கருங்கணி பதுமை தோழி

காரிகை யொருத்தி வந்தாள்

(இ - ள்.) கரிய கூந்தலையும் நெடிய வேல்போன்ற கண்களையும் உடைய அழகியாகிய அவ்விச்சுவலேகை தானும், பந்தினை எடுத்துத் தன் பேரணிகலன்கள் இனிதாக ஆரவாரிக்கவும், கையிற் பெய்யப்பட்ட வளையல்கள் கலகலவென்று ஒலிக்கவும் ஒருங்கே முன் அயிராபதி அடித்த இரண்டாயிரங்கைக்கு மேலும் ஐந்நூறு கையடித்து நிறுத்தினளாக; அப்பால் கரிய கண்களையுடைய பதுமாபதியின் தோழியாகிய அழகியொருத்தி களத்தில் வந்தனள் என்க. (41)

ஆரியை

227. ஆரியை யென்னு நாம

வரிவைகைக் கொண்டு பந்தைச்

சேரமின் சிலம்பு மார்ப்பச்

சிறுநுதன் முத்த ரும்பச்

சீரின்மூ வாயி ரங்கை

சிறந்தவ ளடித்த பின்பு

பேரிசைத் தத்தை யாயம்

பெருங்குழாத் தினிதி னோக்காள்.

(இ - ள்.) பந்தாடு களத்தில் வந்த ஆரியை என்னும் பெயரையுடைய அத்தோழி பந்தினைக் கைக்கொண்டு தன்னிரு சிலம்புகளும் ஒருங்கே ஆரவாரிப்பவும், தனது சிறிய நுதலிலே வியர்வை முத்துப்போன்று அரும்பவும், சிறப்பாக மூவாயிரங்கை முன்னையோரினும் சிறந்தவளாக அடித்து நிறுத்திய பின்னர்ப் பந்தாடற்கு யாரும் துணிந்து வாராமையாலே அவ்வாரியை வெற்றிச் செருக்கோடு மாற்றாராகிய வாசவதத்தையின் தோழிமார் குழாத்தை இனிதாக நோக்கினள் என்க. (42)