யுடைய இளைய நாகத்தின் படம் போன்ற
அல்குலையுடையவளும் பொன்னாலியன்ற வாழைத்தண்டுகளை
ஒத்த இரண்டு தொடைகளையுடையவளும் ஆலிலைபோன்ற வயிற்றையுடையவளும்
ஆமைப்பார்ப்புப்போன்ற புறவடிகளையுடையவளும்,
மின்னல்போன்ற இடையினையுடையவளும் ஆகிய மலரணிந்த
கூந்தலையுடைய அக்கோமகளும் என்க. குறங்கு - தொடை;
ஆலம் - ஆலிலை; பண்டி - வயிறு. (44)
இதுவுமது
230. ஆங்கொரு கார ணத்திற்
றத்தைபால் வந்தி ருந்தாள்
பூங்கொடி தோல்வி கண்டு
பொறுப்பிலா மனத்த ளாகித்
தீங்குறு தத்தை தன்னைச்
சீருடன் வணங்கிப் போந்து
பாங்குறு மிலக்க ணங்கள்
பந்தடி பலவுஞ் சொன்னாள்.
(இ - ள்.) கோசம்பியரண்மனையில்
ஒரு காரணத்தாலே வாசவதத்தையினது தோழியருள் ஒருத்தியாக
வந்து கரந்துறைபவளும் ஆகிய அம்மானனீகை மலர்க்கொடி
போல்வாளாகிய வாசவதத்தை இப்பந்துப் போரின்கண்
தோற்றமை கண்டு பொறாத நெஞ்சை யுடையவளாகித்
துன்புறுகின்ற அவ் வாசவதத்தையை வணங்கி விடைபெற்றுப்
பந்தாடு களத்திலே வந்து அழகிய பந்தாட்டத்தின்
வகைகளையும் அவற்றின் இலக்கணங்களையும் பலவாக
விரித்துக் கூறினள் என்க. (45)
(கலிப்பா)
காஞ்சனமாலை பந்தடித்தல்
231. மூன்றுபத் திரண்டுநன் மூரிப்பந்தெ டுத்துடன்
தோன்றிரண்டு கையினுந் தொடுத்தினி தடித்தலும்
ஆன்றகையி னோட்டலு மலங்கலுட் கரத்தலும்
ஈன்றரவி னாடலு மிறைஞ்சிநிமிர்ந் தாடினாள்.
(இ - ள்.) பந்தாட்டத்தினிலக்கணங்
கூறிய அப்பைந்தொடி முப்பத்திரண்டு நல்ல பெரிய
பந்துகளை எடுத்துக்கொண்டு தோன்றி
|