பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்105


தனது இரண்டு கைகளாலும் அம் முப்பத்திரண்டு பந்துகளையும் மாலைபோலத் தோன்றும்படி தொடர்பாக அடித்தலும் பொருந்திய கையாலே மறித்து ஒட்டலும் மாலையிலே அப் பந்துகளை மறைத்துக்கோடலும் பார்ப்பீன்ற பாம்புபோல ஆடலும் ஆகிய ஆட்ட வகைகளைக் குனிந்தும் நிமிர்ந்தும் ஆடினள் என்க. (46)

இதுவுமது

232. முட்டில்கோல வட்டணை முயன்றுபத்தி யிட்டுடன்
நட்டணை நடனமு நயந்தினிதி னாடவும்
பட்டுடையின் வேர்நுதற் பாங்கினிற் றுடைப்பவும்
இட்டிடை துவளவு மினியபந் தடித்தனள்.

(இ - ள்.) முட்டில்லாத அழகையுடைய வட்ட வடிவமாகப் பந்துகள் தொடர்ந்து வானிலே தோன்றும்படி முயன்றடித்தலும் வரிசையாகத் தோன்றும்படி அடித்தலும் இடையிலே நகைக் கூத்தாட்டத்தையும் விரும்பி இனிதாக ஆடுதலும் பந்தடிக்கும் பொழுதே தன் பட்டாடையாலே வியர்க்கும் நுதலை அழகாகத் துடைத்துக் கோடலும் செய்து தன் சிற்றிடை நுவளும்படி காண்டற்கினிய பந்துகளை அடித்தனள் என்க. நட்டணை - நசைச்செயல். (47)

மானனீகையை அனைவரும் பாராட்டுதல்

233. பரிவுகொண் டனைவரும்

பண்டறியோ மென்மரும்

விரிவுவான் மடந்தையோ

வியந்திரியோ வென்மரும்

தரிவுவிச்சை மங்கையோ

தான் பவண நாரியோ

விரிவுறிந் நிலத்திடை

வேறுகண்ட தில்லென்பார்.

(இ - ள்.) மானனீகையின் பந்தாட்டங்களைக் கண்ட அக்களங் காணும் மக்கள் அனைவரும் அவள்பால் அன்புடையராய் இங்ஙனம் பந்தாடுவாரை யாம் பண்டென்றும் கண்டறிந்திலேம் என்று கூறுவாரும், இவள் விரிவுடைய வான நாட்டுத் தெய்வ மகளோ? அல்லது, வியந்தர தேவப் பெண்ணோ என்று வியப்பாரும், வித்தையினைத் தரித்தலுடைய விச்சாதர மகளோ அல்லது நாகநாட்டு மகளோ? பரந்த இந்த நிலவுலகத்திலே இவள் போல் வார் பிறரை யாங் கண்டதில்லை என்பாரும் ஆயினர் என்க. (48)