பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்107


உள்ளமுடைமையாலே மிகவும் இன்புறுவானாயினன் என்க. சூடகம் - ஒருவகை வளையல். (51)

மானனீகை எண்ணாயீரங்கை பந்தடித்து நிறுத்தல்

237. மாறுமா றெழுவதும் வகையுடன் னிழிவதும்
வீறுமாத ராடவும் வேந்தனுடன் மாதரும்
கூறுமிவ ளல்லது குவலயத்தி னில்லையென்
றேறுபந்தி னெற்றிக்கை யெண்ணாயிர மடித்தனள்.

(இ - ள்.) பந்துகள் மாறு மாறாக எழுவதும் முறையே நிலத்தி லிழிவதமாக வீறுடைய அம்மானனீகை பந்தாடவும் உதயண வேந்தனும் கோப்பெருந்தேவியர் முதலிய மகளிரும் மானனீகை என்று கூறப்படும் இவளுக்கு இந் நிலவுலகத்திலிவளே நிகராதலல்லது பிறர் யாருமிலர் என்று பாராட்டும்படி வானிலேறுகின்ற அப் பந்துகளைப் புடைத்து எண்ணாயிரம் கையடித்து நிறுத்தினள் என்க. (52)

மானனீகை புணர்வும் வாசவதத்தை சினமும்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

238. பிடிமிசை மாதர் போந்து

பெருமணக் கோயில் புக்கார்

கடிமலர்க் கோதை மன்னன்

காவிநன் விழிமா னீகை

இடிமின்னி னுசுப்பி னாளை

யின்புறப் புணர்ந்தி ருப்பத்

துடியிடைத் தத்தை கேட்டுத்

தோற்றிய சீற்றத் தானாள்.

(இ - ள்.) வாசவதத்தை முதலிய மகளிர்கள் பிடியானை முதலியவற்றில் ஏறித் தத்தம் மாளிகை புகுந்த பின்னர் மணங்கமழும் மலர்மாலை யணிந்த உதயண மன்னன் குவளை மலர் போன்ற அழகுடைய நல்ல விழிகளையும், இடிக்குங்காற் றோன்றும் மின்னல் கொடி போன்ற இடையினையும் உடைய அம்மானனீகையை யாழோர் முறைமையாலே களவு மணம் புணர்ந்திருப்ப, அச்செய்தியினை உடுக்கை போன்ற இடையினையுடைய வாசவதத்தை கேள்வியுற்று வெளிப்பட்டுத் தோன்றும் வெகுளியை யுடையளாயினள் என்க. மானிீகை: விகாரம். (53)