மானனீகை மணம்
239. துன்னிரு ணீங்கிக் காலை
தூமலர் கொண்டு தத்தை
மன்னவ னடிவ ணங்க
மனமகிழ் வின்றி நின்ற
அன்னமென் னடையி னாளை
யகமகிழ் குளிரக் கூறி
மன்னன்மா னீகை தன்னை
மணமிகச் செய்து கொண்டான்.
(இ - ள்.) செறிந்த இருளையுடைய அற்றைநாளிரவு
புலர்ந்து வழிநாட் காலையான பொழுது வாசவதத்தை தூய
மலர் கொண்டு உதயணன் திருவடிகளை வணங்காநிற்ப
ஊடலால் மனமகிழ்ச்சியில்லாமல் திருமுகம் வாடி நின்ற
அன்னம் போன்ற நடையினையுடைய அவ்வாசவதத்தையின்
மனம் பெரிதும் மகிழும்படி ஊடல் தீர்த்தற்கியன்ற
பணிமொழி கூறி ஊடல் போக்கி அவளுடன்பாடு பெற்று
அம் மன்னவன் கோசல மன்னவன் மகளாகிய மானனீகையை
மிகச் சிறப்பாகப்பலரறிய மணஞ் செய்து கொண்டனன்
என்க. (54)
விரிசிகை மணம்
240. தேவியர் மூவர் கூடத்
தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின்முன் மாலைசூட்டிக்
காரிகை கலந்து விட்ட
பூவின்மஞ் சரியைப் போலும்
பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற்
றரணீசன் மணந்தா னன்றே.
(இ - ள்.) வாசவதத்தையும் பதுமாபதியும்
மானனீகையும் ஆகிய கோப்பெருந்தேவியர் மூவரும் தன்னோடு
மனமகிழ்ந்து மணந்திருப்பத் தேரையுடைய உதயண மன்னன்
அவர்களோடு இனிது இல்லறம் நடத்தி வருகின்ற நாளிலே
முன்பொரு காலத்தே காட்டகத் தொரு சோலையிலே
மலர்மாலை புனைந்து சூட்டி அவளழகை உள்ளத்தால் நுகர்ந்து
விடப்பட்ட பூங்கொத்துப் போன்ற பொலிவுடைய நல்லாளாகிய
விரிசிகையையும் அம் மாநில மன்னன் மணஞ் செய்து
கொண்டான் என்க. (55)
|