மன்னன் ஆட்சிச் சிறப்பு
241. நட்புடைக் கற்பு மாதர்
நால்வரு மன்ன னுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு
மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து
திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா
நரபதி யாண்டு சென்றான்.
(இ - ள்.) அன்புடைய கற்புடைய மகளிராகிய
தேவிமார் ஒரு நால்வரும் உதயண மன்னனுடைய உள்ளத்தே
சரியாதனத்தில் ஒழிவின்றி வீற்றிருப்பாராக, அம்மன்னன்
அரசு கட்டிலில் வீற்றிருந்து எல்லாவின்பங்களையும்
ஒரு சிறிதும் குறைபாடின்றியே இனிது நுகர்ந்து திட்பமுடைய
பிற நாட்டு மன்னரெல்லாம் வந்து அடிவணங்கித் திறையளப்ப
நட்புடைய நாட்டையெல்லாம் அவ்வேந்தர் வேந்தன்
இனிது ஆட்சி செய்திருந்தனன் என்க. (56)
நான்காவது வத்தவகாண்டம் முற்றும்
|