கருவாகிய மகன் வளர்பிறை போன்று நாடொறும்
நன்கு வளர்தலாலே அப்பேரரசி தானும் வானத்திலே
பறந்துபோய்ப் பல்வேறு காட்சிகளைக் காண்டல் வேண்டும்
என்னும் அவாவுடையளாக;
நிறைவேறாக் குறையையுடைய அந்த விருப்பத்தைக் கேட்டறிந்த
அவ்வெற்றி வேந்தன் அவ்விருப்பத்தை நிறைவேற்ற
வேண்டுமென்று தன்னுளத்திலே நினைத்து அதற்குரிய நெறிகாண்டற்கு
யாண்டும் கூறப்படுகின்ற புகழையுடைய தன் அமைச்சர்களை
அழைத்து அதற்குரிய வழியை வினவினன் என்க. (2)
உருமண் ணுவா கூற்று
244. உருமண்ணுவா விதனைச் செப்பு
முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தி னீரின்
வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோர்
வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப்
பெரிடர் தீர்த்தானன்றோ.
(இ - ள்.) உதயணவேந்தன் வினவலும்
அமைச்சருள் உரு மண்ணுவா என்பான் கூறுகின்றான், “பெருமானே!
முன்னொரு நாள் யாமெல்லாம் வேட்டையாடுதற்
பொருட்டுப் பெரிய மலைகளையுடைய காட்டிற் சென்று
ஆண்டு நீர்வேட்கையாலே உண்டாகிய துன்பத்தாலே நம்மை
எய்திய வருத்தத்தைத் கண்டு அவ்விடத்தே ஒருதேவன்
தானாகவே வந்து நம்முன் தோன்றி நாம்
நீருண்ணும்படி செய்து அப்பெரிய துன்பத்தைப்
போக்கி நம்மை உய்வித்தானல்லனோ!” என்றான்
என்க. (3)
இதுவுமது
245. இன்னமோ ரிடர்வந் தாலு
மென்னைநீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான்
வண்மையி னளித்துப் போந்தான்
சொன்னமா மந்தி ரத்தைச்
சூழ்ச்சியி னினைக்க வென்றான்
பின்னவ னினைத்த போழ்தே
பீடுடை யமரன் வந்தான்.
|