பக்கம் எண் :

114உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


தேவன் மீண்டும் மந்திரம் செவியறிவுறுத்தல்

249. வெள்ளிய மலையிற் றேவன்

விரைக் குழலாள் வயிற்றின்

உள்ளவின் பத்தி னாலே

வுலவுவான் சிந்தை யானாள்

கள்ளவிழ் மாலை வேந்தன்

கதிர்மணித் தேரி னேறிப்

புள்ளெனப் பறக்க மந்த்ர

மீதெனக் கொடுத்துப் போந்தான்.

(இ - ள்.) பின்னர் அத்தேவன் “அரசே! மணங்கமழுங் கூந்தலையுடைய வாசவதத்தையின் மணிவயிற்றின்கண், பண்டு வெள்ளியம் பொருப்பில் வதிந்த தேவனொருவன் கருவாகி வளர்கின்ற காரணத்தினாலே அம்மகவிற் கியன்ற இன்பமே தனது இன்பமாக வருதலாலே வானத்திலே பறந்துலாவுமொரு விருப்பமுடையளாயினள், என்று கூறித், தேன்துளிக்கும் மலர்மாலையணிந்த அவ்வுதயண மன்னன் அத்தேவியோடு ஒளிமணி பதித்த தேரின்கண் ஏறிப் பறவைபோல வானத்திலே பறத்தற்குரிய மந்திரம் இஃதாம் என்று அறிவித்து அம்மந்திரத்தை அவ்வுதயணனுக்கு அறிவித்து மறைந்து போயினன் என்க. (8)

உதயணன் முதலியோர் தேரிலேறி வானத்தே பறந்து போதல்

250. வெற்றித்தே ரேறி வென்வேல்

வேந்தனுந் தேவி தானும்

மற்றுநற் றோழன் மாரும்

வரிசையி னேறி வானம்

உற்றந்த வழிய தேகி

யுத்தர திக்கி னின்ற

பெற்றிநல் லிமயங் கண்டு

பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றான்.

(இ - ள்.) அத்தேவன் அறிவுறுத்த மந்திரத்தின் உதவியாலே வெற்றிவேலையுடைய அவ்வுதயண வேந்தன்றானும் பெருந்தேவியாகிய வாசவதத்தையும் இன்னும் நண்பராகிய யூகி முதலியவரும் முறைப்படி வெற்றிதரும் ஒரு தேரிலேறி வானவெளியிலே பறந்து அவ்வானின் வழிச் சென்று வடதிசையிலே நிற்கின்ற இமயமலையின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்து பின்னர் அவ்விடத்தினின்றும் கீழ்த்திசை நோக்கிச் சென்றான் என்க. (9)