உதயணன் முதலியோர் மக்கட்குப் பெயரிடுதல்
253. நரவாக னன்னே யென்று
நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர்
மிக்கநாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந்
தரிசக னாக தத்தன்
குரவம்பூ மேனி யான
குலமறி பூதி யாமே.
(இ - ள்.) உதயண வேந்தன் தன் மகவிற்கு
நரவாகனன் என்று பெயரிட்டனன். இனி விரிந்த அறிவினையுடைய
யூகி முதலிய நான்கு அமைச்சர்கட்கும் அப்பொழுது
பிறந்த அழகு மிக்க நான்கு மகவுகளுக்கு நிரலே அவ்வமைச்சர்
இட்ட பெயர்கள் அன்பு பொருந்திய ‘கோமுகனும்’
அவனுக்கு நட்பான ‘தரிசகனும்’ ‘நாகதத்தனும்’
குராமலர் போன்ற திருமேனியையுடைய குலத்தின் சிறப்பறிந்த
பூதிகனும் என்பவனாம் என்க. (12)
நரவாகனன் கலைபயிலல்
254. நால்வருந் துணைவ ராகி
நறுநெய்பா லுடன ருந்தி
பான்மரத் தொட்டி லிட்டுப்
பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வ ளர்ந்து
வரிசையி னிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப்
பாங்கினிற் சேர்த்தா ரன்றே.
(இ - ள்.) யூகி முதலிய அமைச்சர்மக்களாகிய
கோமுகன் முதலிய நால்வரும் நரவாகனனுக்குத் தோழராக
அவ்வைந்து மக்களும் நறிய நெய்யும் பாலுமாகிய சிறப்புணா
வுட்கொண்டும், செவிலிமார்பாலுடைய மரத்தாலியன்ற
தொட்டிலிலிட்டுப் புகழ்ந்து வாழ்த்தித் தாலாட்டவும்,
தவழ்ந்தும் மூன்றாநாட்டோன்றும் பெரிய பிறைத்
திங்கள் வளருமாறுபோல வளர்ந்து முறைமையாக அக்குழவிப்பருவம்
நீங்காநிற்ப, அம்மக்கட்குக் குரவன்மார்
பால்போலும் ஆக்கமுடைய மொழிவடிவமான கலைமகளை
முறைப்படி மணம் புரிவித்தனர் என்க. கல்விபயிற்றினர்
என்றவாறு. (13)
|