நரவாகனன் உலாப்போதல்
255. ஞானநற் குமரி தன்னை
நலமுழு துண்டு மாரன்
மானவிற் கணைக்கி லக்கா
மன்மத னென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல
வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச்
சீர்நகர் வீதி சென்றான்.
(இ - ள்.) நாமகளின் இன்பத்தை யெல்லாம்
நன்கு நுகர்ந்து (கலையுணர்ந்து) நரவாகனன்
காளைப்பருவமெய்திய பின்னர்த் தன்னைக் கண்ட
மகளிர் காம வேளின் மலர்க்கணைகளுக் கிலக்கமாகி
இவன்றான் காமவேள் என்பவனோ? என்று மருண்டு மயங்கும்படி
ஒருநாள் தோழரும் தானும் தேவமைந்தர்கள் போலக்
களிற்றியானைகளிலே ஏறி முன்னும் பின்னும் படைகள்
செல்லாநிற்ப, புகழுடைய அக்கோசம்பி நகரவீதியிலே
திரு உலாப் போயினன் என்க. (14)
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு
காமுறுதல்
256. ஒளிர்குழற் கலிங்க சேனை
யுதர்த்தி னுற்ப வித்த
வளிநறும் பூஞ்சு கந்த
மதனமஞ் சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக்
கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக்
காவல குமரன் கண்டான்.
(இ - ள்.) உலாப்போங் காலத்தே அக்கோமகன்
ஒளிருகின்ற கூந்தலையுடைய ‘கலிங்கசேனை’ என்னும்
ஒரு கணிகை வயிற்றிற் பிறந்தவளும், காற்றிற்
கலந்து யாண்டும் பரவும்நறிய மலர்மணத்தையுடையவளும்
‘மதனமஞ்சிகை’ என்னும் பெயரையுடையவளுமாகிய
களிக்கின்ற கயல்மீன் போன்ற கண்ணையுடையாள்
ஒரு பெதும்பையானவள் தனது திருமேனியில் குளிர்ந்த
இளந்தென்றல் தவழுமாறு அழகிய மேனிலை மாடத்து நிலா
முற்றத்து நின்று பந்தாடுதலைக் கண்ணுற்றான் என்க.
(15)
|