பக்கம் எண் :

118உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்

257. மட்டவிழ் கோதை தன்னை

மன்னவ குமரன் கண்டு

இட்டநன் மார னம்பா

லிருவரு மயக்க முற்று

மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள்

மன்னவ குமரன் மின்னின்

இட்டிடை மாதைத் தந்தே

யின்புறப் புணர்ந்தா னன்றே.

(இ - ள்.) தேன்சொரிகின்ற மலர்மாலை யணிந்த அம்மதன மஞ்சிகையை நரவாகனன் கண்டவளவிலே அழகுடைய காமவேள் தன்மேல் ஏவிவிட்ட மலரம்புகளாலே வேறொன்றானும் தீர்தலில்லாத காமநோயால் மயங்கி மின்னல்போன்ற சிற்றிடையாளாகிய அம்மடந்தையை ஒரு தேன்றுளிக்கும் பூம்பொழிலிலே வருவித்துப் பேரின்பமெய்தும்படி அவளோடு கூடினன் என்க. (16)

மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்

258. இருவரும் போகந் துய்த்தே

யிளைத்துயில் கொள்ளும் போழ்து

மருவிய விச்சை மன்னன்

மானச வேக னென்பான்

திருநிற மாதைக் கண்டு

திறத்தினிற் கொண்டு சென்று

பெருவரை வெள்ளி மீதிற்

பீடுறு புரம்புக் கானே.

(இ - ள்.) நரவாகனனும் மதனமஞ்சிகையுமாகிய அவ்விருவரும் இன்ப நுகர்ந்து நுகர்ச்சியிளைப்பாலே இன்றுயில் கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்த விச்சாதர மன்னனாகிய ‘மானசவேகன்’ என்பவன், திருமகள் போன்ற செய்யமேனிச் செல்வியாகிய அம்மதனமஞ்சிகையைக் கண்டு காமுற்று தன்னாற்றலாலே அவளை எடுத்துக்கொண்டு வானத்தே சென்று, வெள்ளிப் பெருமலையிலிருக்கும் பெருமையுடைய தன்னகரத்தை யெய்தினன் என்க. (17)