(இ - ள்.) அந்தத் தெய்வ யானையானது
ஒருநாள் இரவின் கண் உதயணன் துயிலின்கண் கனவிலே
தோன்றிச் சொன்னயந் தேர்ந்து அவன் இனிதாகக்
கேட்கும்படி “கோமகனே! நின்னை யன்றி யானைகட்குக்
குறிப்பு மொழி பயிற்றும் யானைப் பாகன் என்பால்
வந்து என்னைப்பற்றிக் கயிறிட்டுப் பிணித்தாலும்,
என் பிடரில் ஏறினாலும், இற்றைநாள் தொடங்கி எதிர்காலத்திலே
நீ எப்பொழுதாவது நானுணவின்றியிருக்க நீ எனக்கு
முன்பு உண்டாயாயினும், இக்குற்றங்கள் ஏதேனும் ஒன்று
நிகழின் அந்த நாளிலேயே யான் நின்னைவிட் டகன்று
போவேன் காண்!” என்று இவற்றை (அந்த யானை) கூறக்
கேட்டனன். (16)
உதயணன் மாமனாகிய விக்கிரமன் அத்தவப்
பள்ளிக்கு வருதல்
21. செல்லுமக் காலந் தன்னிற்
செறிதவன் புதல்வ னான
வெல்களிற் றியானை வேந்தன்
விக்கிரன் றனக்கு மக்கள்
இல்லையென் றெவ்வங் கூர்ந்தே
யினிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன் பாதந்
தொழுதுநன் கிருந்தா னன்றே.
(இ - ள்.) இவ்வாறு உதயணன்
வாழ்க்கை இனிதாகச் செல்கின்ற காலத்திலே நிறைந்த
தவத்தையுடைய சேடகமுனிவருடைய மகனாகிய வெல்லும்
மறக்களிற்றி யானையையுடைய வேந்தன் விக்கிரமன்
என்பவன் தனக்கு மகப்பேறில்லாமையாலே பெரிதும் நெஞ்சம்
வருந்தியவன் மனம் ஆறுதல் பெறும்பொருட்டு இனிய
மொழியையும் அருளையுமுடைய சேடகமுனிவருடைய தவப்பள்ளிக்கு
வந்து அவருடைய அடிகளில் வணங்கி அவர் வாழ்த்தினையும்
பெற்று அத்தவப் பள்ளியி்லே இன்புற்று நன்குறைந்தனன்.
(19)
விக்கிரமன் உதயணனையும் யூகியையும் கண்டு
இவர்கள் யார்
என முனிவரை வினாதல்
22. புரவல னினிய ராமிப்
புதல்வர்க ளார்கொ லென்ன
வரமுனி யருளக் கேட்டு
மகிழ்ந்துதன் னாய மெல்லாம்
சிரசணி முடியுஞ் சூட்டிச்
செல்வற்குக் கொடுத்துப் போக்கி
விரவிய தவத்த னாக
வேண்டுவ தெண்ண மென்றான்.
|