அவன்பாற் கேண்மையுடையளாகி வான் வழியாக
வந்து அந்த நரவாகனனைக் கண்கூடாகவும் கண்டனள்
என்க. (19)
வேகவதி மதனமஞ்சிகை வடிவத்தோடு நரவாகனனைக்
காண்டல்
261. கண்டபின் காமங் கூர்ந்து
கார்விசும் பதனி னிற்பப்
புண்டவழ் வேலிற் காளை
பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம்
வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக
வதியுஞ்சூ தினிலே வந்தாள்.
(இ - ள்.) வேகவதி நரவாகனனைக் கண்ட
பின்னர் அவன்பாற் பெரிதும் காமமுடையவளாய்
அவனை நோக்கிய வண்ணம் முகில் உலாவும் வானத்திடையே
நிற்குங்காலத்தே பகைவர் புண்களிலே தவழுகின்ற வெற்றிவேலையுடைய
அந்த நரவாகனனோ காணாமற்போன மலர் சூடிய கூந்தலையுடைய
மதனமஞ்சிகை பொருட்டாக மிகவும் வருந்தி வண்டுகள்
முரல மலருகின்ற அப்பூம்பொழிலிடத்தும், மாடங்களிடத்தும்
காட்டின்கண்ணும் சென்று சென்று கூவிக் கூவி அவளைத்
தேடலானான். அதுகண்ட கொவ்வைக்கனி போன்ற
வாயினையுடைய அந்த வேகவதி அம் மதனமஞ்சிகை
வடிவந்தாங்கிச் சூதாக வந்தனள் என்க. (20)
மதனமஞ்சிகையென்று கருதி மன்னன்
அவளைக் கூடுதல்
கலிவிருத்தம்
262. மதன மஞ்சிகை மான்விழி ரூபம்போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
(இ - ள்.) முழுத்திங்கள் போன்ற முகத்தையுடைய
வஞ்சிக் கொடிபோன்ற அவ்வேகவதி அம்மன்னன் தேடுகின்ற
மான் போன்ற விழிபடைத்த அந்த மதனமஞ்சிகையின்
வடிவம்போன்றதும் அம்மன்னனுக்குப் பெரிதும் இன்பந்தருவதுமாகிய
வடிவத்தை இன்புற மேற்கொண்டு பூம்புதரின் ஊடே
யமைந்ததொரு மாதவிக்கொடி வீட்டில் புகுந்து அங்கு
அவன் வரவினை எதிர் பார்த்திருந்தாள் என்க. (21)
|