பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்121


இதுவுமது

263. தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதை யைக்கண்டு பீடுடைக் காளையும்
தீதறுந் திறந் தேர்ந்து புணர்ந்தனன்.

(இ - ள்.) பெருமையுடைய அந்நரவாகனனும் தேனது துன்பந்தீரும்பொருட்டு மதனமஞ்சிகையைத் தேடிவருபவன் தோகை மாமயில்போல்வாளாகிய அவ்வேகவதியினை மதனமஞ்சிகை யென்றே கருதிக்கண்டவனாய் அவளைப் பூந்தாதுதிர்ந்து பரவுகின்ற அம்மாதவிப் பூம்பந்தரின்கீழே அவளைக் கூடியின்புற்றான் என்க. (22)

மன்னவன் வேகவதியை ஐயுற்று வினவுதல்

264. ஆங்கொர் நாளி லரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்கு ழா அல் நீ புதியைமற் றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.

(இ - ள்.) இவ்வாறு நிகழுங்காலத்தே ஒருநாள் வேகவதியின் துயிலின்கண் தேன்பொதுளிய மலர்மாலையணிந்த அவளுடைய உண்மை வடிவத்தை நரவாகணன் கண்டு திகைத்து ‘மலர் சூடிய கூந்தலையுடைய மடந்தாய்! நீ புதியையாக விருக்கின்றனை! நீ யார்?’ என்று வினவ அவள் அரசன்பக்கத்தே மதனமஞ்சிகை வடிவத்தில் வந்து தன் வரலாற்றினைப் பல மொழிகளாலே கூறினாள் என்க. (23)

நரவாகனன் வேகவதியை விரும்புதல்

265. கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பிநீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே.

(இ - ள்.) வேகவதியின் வரலாறு கேட்ட அந்நரவாகனனும் குற்றமற்ற அழகுடைய அந்த வேகவதியினை நோக்கி ‘யான் விரும்புகின்ற நின் பழைய வடிவத்தை மீண்டுங் காட்டுக’ என்று வேண்டவே அவளும் தன் உண்மை வடிவத்தைக் காட்ட அது கண்ட அம்மன்னனும் அவ்வுருவத்தையே பெரிதும் விரும்பி உயரிய காமவேள் கணைகள் மிக்கு ஏவுதலாலே அவ்வேகவதியைக் கூடி மகிழ்ந்தனன் என்க. (வேடம் - ஈண்டுருவம்.) (24)