பக்கம் எண் :

122உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


மானசவேகன் நரவாகனனையும் வேகவதியையும்
பற்றிப்போதல்

266. மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.

(இ - ள்.) நிலைபெற்ற வித்தைகளையுடைய அந்த மானசவேசன் என்னும் வித்தியாதரன் தன்னேவலிற் பொருந்திய தங்கையாகிய வேகவதியை யாண்டும் காணப் பெறானாய், அவளை நினைத்துத் தன் தெய்வ அறிவாலே அவள் நரவாகனனை நயந்து போன செய்தியை அறிந்து சினவுரை பல பேசி நிலவுலகிற்கு வந்து நரவாகனனும் வேகவதியும் துயிலும்பொழுது இருவரையும் மந்திரத்தால் மயக்கிக் கைப்பற்றிக்கொண்டவனாய் என்க. (25)

மாவசவேகன் நரவாகனனை நிலத்திற் றள்ளிவீடுதல்

267. வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தான்.

(இ - ள்.) இருவரையும் கைப்பற்றிக்கொண்டு ஒரு வானவூர்தியிற் செல்கின்ற மானசவேகன் இடைவெளியிலே நரவாகனனைத் தள்ளிவிட்டானாக மயங்கியிருக்கின்ற அந்நரவாகனன் நிலநோக்கி வீழுகின்றபொழுது மணங்கமழும் கூந்தலையுடைய அவ்வேகவதிதானும் அவனைத் தாங்கி நிலத்திலே கிடத்தும்படி தன்னுள்ளத்தின் கண்ணதாகிய ஒரு மந்திரத்தை ஓதிவிடுத்தனள், நரவாகனன்றானும் மெல்ல மெல்ல நிலநோக்கிவந்து ஒரு காட்டின் கண் வீழ்ந்தான் என்க. (26)

நரவாகனனைச் சதானிக முனிவன் காண்டல்

268. வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வ ரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.

(இ - ள்.) வேகவதி ஓதிய மந்திரத் தெய்வம் தாங்கிவிடுதலாலே வானின்று நிலத்தில் மூங்கிலிலை விழுமாறுபோல மெத்தென வீழ்ந்தவனாகிய ஒளி திகழும் வேற்படையினையுடைய நரவாகனனை அந்தக் காட்டிலேயிருந்து இனி வருகின்ற பிறப்பினை வாராமல்