(இ - ள்.) பெருமைமிக்க நரவாகனன் அந்த
வித்தியாதரனை நோக்கி “ஐய! நீ யார்? நின்
வரலாற்றை எனக்குக் கூறுக!” என்று பணித்தலும்,
குளிர்ந்த மெய்ம்மொழியையுடைய அந்த வித்தியாதரன்
வரலாறு கூறுபவன்:--
“மாண்புடையோய்! கேட்டருளுக! பிறர்
எய்துதற்கரிய இந்த வெள்ளிமலைமிசை கண்ணுக்கு
அழகாக விளங்குகின்ற கொடிகளையுடைய கந்தருவபுரம்
என்னும் நகரமொன்றுளது” என்றான் என்க. (36)
இதுவுமது
278. காவ லன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவி ளங்கொடி புத்திரி நாகமும்
மேவி ளங்கு மநங்கவி லாசனை.
(இ - ள்.) “அந்நகரத்தரசனாகிய
நீலவேகன் என்பான் மனைக் கிழத்தியாகிய புலவர்
நாவால் விளக்கமுறும் அழகும் புகழுமுடையாள் நாகதத்தை
என்னும் பெயரினள் ஆவாள், இளைய மலர்க்கொடி
போன்ற அவள் மகள் பெயர் தானும் மேன்மையுற்று
விளங்குகின்ற அநங்க விலாசனை என்பதாம்.” என்றான்
என்க. (37)
இதுவுமது
279. சுரும்பார் மாலை யமளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கி னெழுந்ததே.
(இ - ள்.) “வண்டுகள் ஆரவாரிக்கும்
மலர்மாலை தூக்கிய படுக்கையின் கண்ணே கரும்பு
போன்ற இனிய மொழியையுடைய அவ்வநங்க விலாசனை
துயிலுங்காலத்தே காதற் பண்புடைய தொரு கனவின்
கண்ணே கண்டோர் விரும்புதற்குக் காரணமான மறமிக்க
ஓர் அரிமான் குட்டி பரந்த மண்ணுலகினின்றும் தன்
குகைப் பக்கத்தை விட்டெழுந்தது” என்றான் என்க.
(38)
இதுவுமது
280. வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுத னனையர்க்கு ரைத்தனள்.
|