(இ - ள்.) “எழுந்த அச்சிங்கக்
குருளை வெள்ளிமலை மிசையேறிவந்து தன் முலைமேற்பொருந்திய
பெறற்கரிய முத்துமாலையைக் கௌவிப் பின்னர்
மணங் கமழ்கின்ற மலர் மாலையைத் தனக்குச் சூட்டவும்
அவ்வரிவை கண்டு அக்கனவினைத் தன் தாய்மார்க்குக்
கூறினள்,” என்றான் என்க. (39)
இதுவுமது
281. வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பி னிறைஞ்சினன்
நல்ல ருந்தவ னற்கனாக் கேட்டனன்.
(இ - ள்.) “பகைவரால் வெல்லுதற்
கரிய வேற்படையினையுடைய அந்த நீலவேகன் என்னும்
அரசன்றானும் அத்தாயர் வாயிலாய் அநங்கவிலாசனையின்
கனா நிகழ்ச்சியினைக் கேட்டு அப்பொழுதே சென்று
புகழ்தற் கரிய தவத்தையுடைய சுமித்திரன் என்னும்
ஒரு நல்ல துறவியைக் கண்டு புன்மையில்லாத அம்முனிவனுடைய
அடிகளைப் பொலிவுடன் வணங்கியவனாய்ச் சிறந்த செயற்கரிய
தவத்தையுடைய அம் முனிவனிடம் அநங்கவிலாசனை கண்ட
நல்ல கனவின் பயன் யாதென வினவினன்,” என்றான்
என்க. (40)
இதுவுமது
282. அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
(இ - ள்.) “அந்தத் துறவிதானும் அக்கனா
நிகழ்ச்சியைக் கேட்டு ஆராய்ந்து அதன் பயன்
இஃதெனக் கூறினன், (அஃதாவது, வேந்தே மணிதிணிந்த
நிலவுலகத்தினின்றும் நின்னுடைய மருமகன் நின்பால்
வருவன். நீ கூறிய நின் மகட்கு மணமகனாகும் அம்மன்னன்
செல்வம் நிறைந்த இந்த வித்தியாதர ருலகத்தையும்
தனது ஆணையாலே ஆட்சி செய்வன் காண்! என்பது,” என்றான்
என்க. நேமி - ஆணைச்சக்கரம். (41)
இதுவுமது
283. அம்மு னிவன்சொ லரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
|